மணிப்பூரில் கோம் சமூகத்தவர் கிராமங்களின் பாதுகாப்பை உறுதி செய்க: அமித் ஷாவுக்கு மேரி கோம் கடிதம்

By செய்திப்பிரிவு

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இரண்டு சமூக குழுக்களும் கோம் சமூகத்தவரின் கிராமங்களில் ஊடுருவுவதை பாதுகாப்புப் படைகள் தடுத்து, அந்தக் கிராமங்களின் பாதுகாப்பினை உறுதிபடுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நட்சத்திரக் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய அமைச்சருக்கு மேரி கோம் எழுதியிருக்கும் அந்தக் கடிதத்தில், "போராட்டம் நடத்தும் இரண்டு சமூகக் குழுக்களுக்கு இடையில் நாங்கள் சிதறடிக்கப்பட்டிருக்கிறோம். இரண்டு பக்கங்களிலும் என் சமூகத்தினர் மீது ஊகங்களும், சந்தேகமும் உண்டு. நாங்கள் பிரச்சினையின் நடுவில் இருக்கின்றோம். பலவீனமான உள்நிர்வாகம், குறைவான எண்ணிக்கையில் சிறுபான்மைச் சமூகமாக இருப்பதால் எங்களின் எல்லைக்களுக்குள் ஊடுருவும் எந்த சக்தியையும் எங்களால் எதிர்த்து நிற்க முடியவில்லை.

எனவே, இரண்டு சமூகங்களின் போராளிகளும் எங்களின் கோம் கிராமங்களில் ஊருவதை தடுத்து எங்களின் பாதுகாக்கப்பினை உறுதிப்படுத்த பாதுகாப்பு படைகளின் உதவியை நாடுகிறோம். மணிப்பூர் மாநிலத்தில் அமைதியைத் திரும்பக் கொண்டு வருவதிலும், மக்களைப் பாதுகாப்பதிலும் இந்திய ராணுவம், துணை ராணுவப் படை, மாநில போலீஸ் பாரபட்சம் காட்டக் கூடாது" என்று மேரி கோம் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மணிப்பூரில் உள்ள அனைவரும், குறிப்பாக மைத்தேயி, குகி ஸோ சமூத்தினைச் சேர்ந்தவர்கள் தங்களுக்குள் இருக்கும் வேற்றுமைகளை ஒதுக்கி தள்ளிவிட்டு மாநிலத்தில் அமைதியும் இயல்பு நிலையும் திரும்ப இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மணிப்பூரும் வன்முறையும்: மணிப்பூரில் முதல்வர் பிரேன்சிங் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநிலத்தின் மக்கள் தொகையில் சுமார் 53 சதவீதம் பேர் மைதேயி சமூகத்தையும் மீதமுள்ளவர்கள் குகி, நாகா உள்ளிட்ட சமூகத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர். மைதேயி சமூகத்தில் பெரும்பாலானோர் இந்து மதத்தையும், குகி, நாகா சமூகத்தில் பெரும்பாலானோர் கிறிஸ்தவ மதத்தையும் பின்பற்றுகின்றனர். மணிப்பூர் தலைநகர் இம்பால் மற்றும் அதனை ஒட்டியுள்ள பள்ளத்தாக்கு பகுதிகளில் மைதேயி சமூகத்தினரும் வனப்பகுதிகளில் குகி, நாகா சமூகத்தினரும் வசிக்கின்றனர்.

மணிப்பூரில் இதுவரை பதவி வகித்த 12 முதல்வர்களில் 10 பேர் மைதேயி சமூகத்தை சேர்ந்தவர்கள். தற்போதைய முதல்வர் பிரேன் சிங்கும் இந்த சமூகத்தை சேர்ந்தவர் ஆவார். மணிப்பூரில் ஆட்சி, அதிகாரத்தில் மைதேயி சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் வனப்பகுதி மீட்புப் பணி என்ற பெயரில் குகி, நாகா சமூகத்தினரின் வாழ்விடங்கள், மத வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்தச் சூழலில் குகி, நாகா சமூகத்தினரை போன்று தங்களுக்கும் பழங்குடி அந்தஸ்து வழங்க வேண்டும் என்று மைதேயி சமூகத்தினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

இந்த விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க மாநில அரசுக்கு பரிந்துரை செய்தது. இதனால் தங்களது உரிமைகள் முழுமையாகப் பறிக்கப்படும் என்று குகி, நாகா சமூகத்தினர் கடந்த மே 3-ம் தேதி போராட்டம் தொடங்கினர்.

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும் குகி சமூகத்தினருக்கும் இடையே கடந்த மே 3-ம் தேதி மோதல் ஏற்பட்டது. சுமார் 2 மாதங்களுக்கும் மேலாக நீடிக்கும் கலவரத்தில் இதுவரை 142 பேர் உயிரிழந்துள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 65,000 பேர் வீடுகளை இழந்து அகதிகளாகி உள்ளனர். இதுவரை 5,995 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE