சந்திரயான்-3 வெற்றிக்கு பாராட்டு முதல் கபில் சிபலுக்கு 'ஓகே' சொன்ன ராகுல் வரை - ‘இண்டியா’ கூட்டம் ஹைலைட்ஸ்

By செய்திப்பிரிவு

மும்பை: எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில், இஸ்ரோவின் சந்திரயான்-3 திட்ட வெற்றியைப் பாராட்டித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இண்டியா கூட்டணியின் இரண்டாம் நாள் ஆலோசனைக் கூட்டம் மும்பையில் இன்று தொடங்கியது. இதில், முதல் நிகழ்வாக தலைவர்கள் ஒன்றாக இணைந்து குழு புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர். இதனையடுத்து, ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. கூட்டம் தொடங்கியவுடன் சந்திரயான்-3 திட்ட வெற்றியைப் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தில், "இண்டியா கட்சிகள் இணைந்து அன்றைய, இன்றைய ஒட்டுமொத்த இஸ்ரோ குடும்பத்தையும் பாராட்டுகிறோம். அதன் முந்தைய, தற்போதைய சாதனைகள் தேசத்தைப் பெருமிதம் கொள்ளச் செய்துள்ளது.

விண்வெளி ஆய்வு மையத்தின் திறன்களை வளர்த்தெடுக்கவும், ஆழமாக்கவும் 60 ஆண்டுகள் ஆகியுள்ளது. சந்திரயான் வெற்றி இளைஞர்கள் அறிவியலை ஊக்கமுடன் புதிய உத்வேகத்துடன் அணுகவும், சமூகத்தில் அறிவியல்தன்மையை வளர்க்கவும் பயன்படும். அதேபோல் ஆதித்யா-எல்1 மிஷன் சூரியனை ஆராய்ச்சி செய்யவுள்ளதை ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நிலவின் தென் துருவத்தில் ஆய்வு மேற்கொண்டுவரும் லேண்டர், நிலவிம் மேற்பரப்பில் பிளாஸ்மா மூலக்கூறுகள் இருப்பதும், அங்கு நில அதிர்வு ஏற்பட்டதைக் கண்டறிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒருங்கிணைப்புக் குழு அமைக்க வாய்ப்பு: இண்டியா கூட்டணியின் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் ஒருங்கிணைப்புக் குழு அமைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இதற்காக காங்கிரஸ் தலைவர் கார்கே அனைத்துக் கட்சிகளிடமும் தத்தம் கட்சியில் இருந்து ஒரு நபரின் பெயரைப் பரிந்துரைக்கக் கேட்டுள்ளதாகத் தெரிகிறது. அதேபோல் பாஜகவை எதிர்கொள்ள பொதுவான ஒரு கொள்கைக் குறிப்பையும் தயார் செய்வது பற்றி கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.

தாக்குதலை எதிர்கொள்ள தயாராகுங்கள்: கூட்டத்தில் பேசிய கார்கே, இனிவரும் மாதங்களில் "இண்டியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ரெய்டுகள், கைது நடவடிக்கைகள் போன்ற தாக்குதல்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்" என்றார். மகாராஷ்டிரா, ராஜஸ்ஹான், மேற்குங்கம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கரில் ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டார்கள் என்று மத்திய அரசை சாடினார். சிபிஐ, அமலாக்கத் துறை அமைப்புகளைப் பற்றி பெயர் குறிப்பிடாமல் அவர் இவ்வாறு கூறினார்.

கபில் சிபலுக்கு ஓகே சொன்ன ராகுல்: ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட குழு புகைப்படத்தில் காங்கிரஸ் முன்னாள் அமைச்சரும், தற்போதைய சுயேட்சை ராஜ்யசபா உறுப்பினருமான கபில் சிபல் இடம்பெற்றிருந்தார். ராகுலுக்கு இரண்டு இடங்கள் தள்ளி கபில் சிபல் நிற்கிறார். இந்தப் புகைப்படம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கேசி வேணுகோபால், கபில் சிபலுக்கு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க அதிகாரபூர்வமாக அழைப்பு விடுக்கப்படாதபோதிலும் அவர் வருகை தந்துள்ளது பற்றி ராகுலிடம் கூறியதாகவும், அதற்கு ராகுல் காந்தி யார் வந்தாலும் தடையில்லை என்று கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்டாலின் யோசனை: இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய "இந்திய ஜனநாயகத்தைக் காப்பாற்றுவது என்ற ஒற்றை இலக்கின் முன்பு, நிச்சயமாக பாஜக தோற்கடிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை" என்று கூறியதுடன் சில யோசனைகளையும் முன்வைத்தார். அதன் விவரம்: “ஒருங்கிணைப்புக் குழு, செயல் திட்டம் உடனடி தேவை” - இண்டியா கூட்டணி கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் யோசனை

புதிய முழக்கம்: ‘இணையும் பாரதம், வெல்லும் இண்டியா’ என்பதை இண்டியா கூட்டணி தனது தேர்தல் முழக்கமாக முன்வைத்துள்ளதாக தெரிகிறது. மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா முஃப்தி நேற்று மும்பை வந்ததும் இந்த வாசகத்தையே முழங்கினார். ‘ஜூடேகா பாரத், ஜீதேகா இண்டியா’ என்ற முழக்கத்தை அவர் எழுப்ப, அங்கிருந்தவர்கள் பதிலுக்கு அதே முழக்கத்தை எழுப்பினர். இதன் தொடர்ச்சியாக, இன்று நடைபெற்ற குழு புகைப்பட நிகழ்வின்போதும் பின்னணியில் இந்த வாசகம் இடம் பெற்றுள்ளது.

மம்தா நம்பிக்கை: கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, “சிறந்த இந்தியாவை உருவாக்கவே நாங்கள் முயன்று வருகிறோம்” என குறிப்பிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்