ஒரே நாடு ஒரே தேர்தல் | முன்னாள் குடியரசுத் தலைவர் தலைமையில் குழு அமைத்தது மரபு மீறிய செயல்: காங்கிரஸ்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆய்வு மேற்கொள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைத்தது மரபு மீறிய தவறான செயல் என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பிரமோத் திவாரி, “முன்னாள் குடியரசு தலைவர் ஒருவரை ஒரு கமிட்டியின் தலைவராக அரசு நியமிப்பதை இப்போதுதான் நான் முதன்முறையாகப் பார்க்கிறேன். ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆய்வு செய்வதற்கான குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி அல்லது ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரை நியமித்திருக்கலாம்.

புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை குடியரசுத் தலைவரைக் கொண்டு திறக்காமல், பிரதமரைக் கொண்டு திறந்ததன் மூலம், குடியரசுத் தலைவர் பதவிக்கு இருக்கும் கண்ணியத்தை முடிவுக்குக் கொண்டு வந்தனர். தற்போது முன்னாள் குடியரசுத் தலைவர் ஒருவரை ஒரு குழுவின் தலைவராக நியமித்து மரபை மீறியுள்ளனர். இதன் மூலம் தவறான பாரம்பரியத்தை உருவாக்கி இருக்கிறார்கள்” என கண்டித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சமாஜ்வாதி மூத்த தலைவர் ராம் கோபால் யாதவ், "குடியரசுத் தலைவர் பதவி வகித்தவர்களை, வேறு பொறுப்புகளில் நியமிக்கும் மரபு இதுவரை இருந்தது இல்லை. மரபை மீறி ராம்நாத் கோவிந்த் நியமிக்கப்பட்டிருக்கிறார். இது தவறானது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது குறித்து முதலில் விவாதம் நடைபெற வேண்டும். அதன் பிறகே முடிவு எடுக்கப்பட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ விவகாரத்தை ஆய்வு செய்வதற்காக குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. அதன் விவரம்: ஒரே நாடு ஒரே தேர்தல் | குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைத்தது மத்திய அரசு

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE