மும்பை: "இணையும் பாரதம், வெல்லும் இண்டியா’ என்பதை இண்டியா கூட்டணி தனது தேர்தல் முழக்கமாக முன்வைக்க முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.
இண்டியா கூட்டணியின் இரண்டாம் நாள் ஆலோசனைக் கூட்டம் மும்பையில் இன்று தொடங்கியது. இதில், முதல் நிகழ்வாக தலைவர்கள் ஒன்றாக இணைந்து குழு புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர். இதனையடுத்து, ஆலோசனைக் கூட்டம் தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தில், இண்டியா கூட்டணி இப்போதிலிருந்தே ஒன்றிணைந்து செயல்படத் தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்பட இருக்கிறது.
இதற்காக பல்வேறு குழுக்களை ஏற்படுத்த இண்டியா கூட்டணி திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, பொது சமூக ஊடக பக்கங்களை ஏற்படுத்தி பிரச்சாரத்தை முன்னெடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கென கூட்டணிக் கட்சிகளின் சமூக ஊடகப் பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் நாளை (செப்.2) நடைபெறும் என்றம் தகவல் வெளியாகி உள்ளது. ‘இணையும் பாரதம், வெல்லும் இண்டியா’ என்பது கூட்டணியின் முழக்கமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்றில் இருந்தே இந்த முழக்கம் மும்பையில் எதிரொலிக்கத் தொடங்கியது. மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா முஃப்தி நேற்று மும்பை வந்ததும் இந்த வாசகத்தையே முழங்கினார். ‘ஜூடேகா பாரத், ஜீதேகா இண்டியா’ என்ற முழக்கத்தை அவர் எழுப்ப, அங்கிருந்தவர்கள் பதிலுக்கு அதே முழக்கத்தை எழுப்பினர். இதன் தொடர்ச்சியாக, இன்று நடைபெற்ற குழு புகைப்பட நிகழ்வின்போதும் பின்னணியில் இந்த வாசகம் இடம் பெற்றுள்ளது.
கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, சிறந்த இந்தியாவை உருவாக்கவே நாங்கள் முயன்று வருகிறோம் என குறிப்பிட்டார். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது குறித்து ஆய்வு செய்ய குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த சமாஜ்வாதி மூத்த தலைவர் ராம் கோபால் யாதவ், "குடியரசுத் தலைவர் பதவி வகித்தவர்களை, வேறு பொறுப்புகளில் நியமிக்கும் மரபு இதுவரை இருந்தது இல்லை. மரபை மீறி ராம்நாத் கோவிந்த் நியமிக்கப்பட்டிருக்கிறார். இது தவறானது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது குறித்து முதலில் விவாதம் நடைபெற வேண்டும். அதன் பிறகே முடிவு எடுக்கப்பட வேண்டும்" என தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த சிவ சேனா(UBT) மூத்த தலைவர் சஞ்சய் ராவத், "ஒரே நாடு; ஒரே தேர்தல் என்பது நல்லதுதான். ஆனால், தேர்தல் நியாயமாக நடைபெற வேண்டும். நியாயமான தேர்தலுக்கான எங்களின் கோரிக்கையை தள்ளிப்போடவே இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது" என கூறினார்.
கூட்டணி கடந்து வந்த பாதை: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள ‘இண்டியா’ கூட்டணியின் ஆலோசனை கூட்டம் பாட்னா, பெங்களூருவில் கடந்த ஜூன், ஜூலையில் நடந்த நிலையில், 3-வது ஆலோசனை கூட்டம் மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் நேற்று மாலை தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் 28 கட்சிகளை சேர்ந்த 63 தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
கூட்டத்தின் முதல் நாளான நேற்று இரவு, கூட்டணி தலைவர்களுக்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே விருந்து அளித்தார். இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் ஸ்டாலின், பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா, ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா, மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முப்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டணிக்குள் மோதல்: இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் மத்தியில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. குறிப்பாக, கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கூட்டணியும், காங்கிரஸும் நேரடி மோதலில் ஈடுபட்டு வருகின்றன. மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் எதிர் எதிர் துருவங்களாக செயல்படுகின்றன. காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி - தேசிய மாநாட்டு கட்சி இடையே மோதல் நிலவுகிறது. டெல்லி, பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மியுடனும், உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதியுடனும் காங்கிரஸ் மோதல் போக்கை கடைபிடிக்கிறது. எனவே, மக்களவை தேர்தலின்போது கூட்டணிக் கட்சிகள் எந்த அடிப்படையில் செயல்பட வேண்டும் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.
பிரதமர் வேட்பாளர் யார்? - பிரதமர் வேட்பாளருக்கான போட்டியில் ராகுல் காந்தி, நிதிஷ் குமார், கேஜ்ரிவால், சரத் பவார், உத்தவ் தாக்கரே என பலர் உள்ளனர். இதுபற்றி ராஷ்ட்ரீய ஜனதா தள மூத்த தலைவர் தேஜஸ்வியாதவிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘‘மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, புதிய எம்.பி.க்கள் ஆலோசித்து பிரதமரை தேர்வு செய்வார்கள்’’ என்றார்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் வலுவான பிரதமர் வேட்பாளராக மோடி உள்ளார். எனவே, மக்களவை தேர்தலுக்கு முன்பாகவே இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்று பெரும்பாலான தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்வதில் இண்டியா கூட்டணியில் குழப்பம் நீடிக்கிறது. இந்நிலையில், இன்றைய கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago