ஓணம் பண்டிகை காலத்தில் கேரளாவில் 10 நாட்களில் ரூ.770 கோடிக்கு மது விற்பனை

By செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 20-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை 10 நாட்கள் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகை காலத்தில் கேரளா முழுவதும் மதுபானங்களின் விற்பனை புதிய உச்சத்தை எட்டி உள்ளது.

கேரள அரசு நிறுவனமான பெவ்கோ, அந்த மாநிலத்தில் மதுபான விற்பனையை ஒழுங்குபடுத்தி வருகிறது. கேரளா முழுவதும் பெவ்கோ நிறுவனத்துக்கு சொந்தமான மதுபான கடைகளில், ஒரு கடையில் நாள்தோறும் சராசரியாக 2,000 வாடிக்கையாளர்கள் மதுபானங்களை வாங்கி வருகின்றனர். ஓணம் பண்டிகையை ஒட்டி பெவ்கோ மதுபான கடைகளில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது.

பண்டிகையின் 10-ம் நாளான திருவோணம் கடந்த 29-ம் தேதி கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் பெவ்கோ மதுபான கடைகள் மூடப்பட்டன. இந்த சூழலில் ஓணம் பண்டிகை நாட்களில் ஒட்டுமொத்தமாக 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மதுபானங்களை வாங்கியதாகவும் ரூ.770 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி இருப்பதாகவும் பெவ்கோ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த ஆண்டு ஓணம் பண்டிகை காலத்தில் ரூ.700 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து கேரள அரசு வட்டாரங்கள் கூறும்போது, “மாநில அரசு பெரும் நிதிச் சுமையை எதிர்கொண்டு வருகிறது. மதுபான விற்பனையின் மூலம் கிடைத்த வருவாயால் நிதிச் சுமையை ஓரளவுக்கு சமாளிக்க முடியும்" என்று தெரிவித்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE