பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார் பிரக்ஞானந்தா

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: உலகக் கோப்பை செஸ் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய கிராண்ட் மாஸ்டரான தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா தனது பெற்றோருடன் டெல்லியில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அஜர்பைஜானின் பாகு நகரில் சமீபத்தில் நடந்த ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடரில் இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா வெள்ளிப் பதக்கம் வென்றார். இறுதிப் போட்டியில் அவர், உலகின் முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனுடன் டை பிரேக்கரில் தோல்வியை சந்திக்க நேரிட்டது. எனினும், இத்தொடரில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய பிரக்ஞானந்தா அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஃபிடே கேண்டிடேட்ஸ் தொடரில் விளையாட தகுதி பெற்றார்.

அஜர்பைஜானில் இருந்து நேற்றுமுன்தினம் நாடு திரும்பிய பிரக்ஞானந்தாவுக்கு, சென்னை விமான நிலையத்தில் தமிழக அரசு சார்பில் மேள தாளங்கள், நாட்டுப்புற நடனங்களுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து அவர் தனது பெற்றோருடன் தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கி, முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.

இந்நிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் பிரக்ஞானந்தா தனது பெற்றோர் ரமேஷ் பாபு - நாகலட்சுமியுடன் நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றார். பிரக்ஞானந்தாவை தட்டிக் கொடுத்தும், அரவணைத்தும் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.

இதுதொடர்பான புகைப்படங்களை ‘எக்ஸ்’ வலைதளத்தில் பகிர்ந்த பிரக்ஞானந்தா, ‘பிரதமரை சந்தித்தது பெருமையாக இருந்தது. என்னையும், பெற்றோரையும் ஊக்கப்படுத்திய அவரது அனைத்து வார்த்தைகளுக்கும் நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில், ‘மிக விசேஷமான விருந்தினர்களை சந்தித்தேன். உங்களையும், உங்களது குடும்பத்தினரையும் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி. உங்கள் ஆர்வம், விடாமுயற்சியை சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளீர்கள். இந்தியாவின் இளைஞர்கள் எந்த களத்தையும், எப்படியும் கைப்பற்ற முடியும் என்பதை நீங்கள் காட்டியுள்ளீர்கள். உங்களை நினைத்து பெருமை அடைகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE