காவிரி விவகாரம் | தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு - கர்நாடகாவில் விவசாயிகள் நள்ளிரவில் போராட்டம்

By செய்திப்பிரிவு

பெங்களூரு: காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு இணங்க தமிழகத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீரை கர்நாடகா திறந்துவிட்டுள்ளது. இதனிடையே, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் விவசாயிகள் சிலர் இரவு மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மாண்டியாவில் நேற்று காலை முதலே போராட்டம் நடத்திய கர்நாடக விவசாயிகள் இரவும் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர். காங்கிரஸ் ஆதரவு பெற்ற சுயேச்சை எம்எல்ஏ தர்ஷன் புட்டனையாவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, காவிரி நதிநீர் பிரச்சனை குறித்து விவாதிக்க கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் இன்று டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளார். நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு நாளை மறுநாள் (செப்.1ம் தேதி) விசாரணைக்கு வருகிறது. அதனால் காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக‌ அணைகளின் நீர் இருப்பு குறித்த அறிக்கையை இன்று அல்லது நாளை தாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளது. அந்தஅறிக்கையின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் இவ்வழக்கில் முடிவெடுக்கும் என தெரிகிறது. இதற்கு மத்தியில் தான் டி.கே.சிவக்குமார் டெல்லி செல்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE