‘இண்டியா’ கூட்டணியின் மும்பை சந்திப்பு: லோகோ, தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட வாய்ப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மும்பையில் வியாழக்கிழமை தொடங்கும் ‘இண்டியா’ கூட்டணியின் 2 நாள் கூட்டத்தில், 2024 மக்களவைத் தேர்தலையொட்டிய வியூகங்கள் வகுக்குப்படும் எனத் தெரிகிறது. குறிப்பாக, தொகுதிப் பங்கீடு குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

அடுத்த ஆண்டு நடக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை வீழ்த்துவதற்காக, 26 எதிர்க்கட்சிகள் இணைந்து 'இண்டியா' என்ற பெயரில் கூட்டணியை உருவாக்கி உள்ளன. இதன் முதல் கூட்டம், பிஹார் மாநிலம் பாட்னாவில் கடந்த ஜூன் 23-ம் தேதியும், 2-வது கூட்டம் கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் கடந்த மாதம் 17 மற்றும் 18-ம் தேதிகளிலும் நடைபெற்றது. அடுத்த கூட்டம், நாளை (ஆக.31) மற்றும் நாளை மறுநாள் (செப்.1) மும்பையில் நடைபெறவுள்ளது. எதிர்க்கட்சிகளின் இந்த மூன்றாவது சந்திப்பு மும்பையின் புறநகர் பகுதியில் உள்ள கிராண்ட் ஹயாட் என்ற சொகுசு விடுதியில் நடக்கவுள்ளது.

இந்த இரண்டு நாள் கூட்டத்தில் பங்கேற்க ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவும், அவரது மகனும் பிஹார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவும் செவ்வாய்க்கிழமையே மும்பையை அடைந்துவிட்டனர். இந்தக் கூட்டத்தில் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவது முக்கிய அங்கம் வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, தேர்தலுக்கு முன்பாக கட்சிகளுக்குள் இருக்கும் பிரச்சினைகள் குறித்தும், ஒருங்கிணைப்புக் குழுவின் தேவைகள் குறித்தும் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

எதிர்க்கட்சிகளின் மக்களவைத் தேர்தல் வெற்றிக்குப் பின்னரே யார் பிரதமர் என்று தீர்மானிக்கப்படுவார் என காங்கிரஸ் கட்சியின் பி.எல்.புனியா கூறியிருப்பதால் ‘இண்டியா’ கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் குறித்த விவாதம் இக்கூட்டத்தில் நடைபெறாது. இந்த மும்பைக் கூட்டத்துக்கு பின்னர் ‘இண்டியா’ கூட்டணியின் சின்னம் வெளியிடப்படும்.

இண்டியா கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஆலோசனை நடத்தவும், 3 அல்லது 4 மாநிலங்களுக்கு ஒரு ஒருங்கிணைப்பாளரை நியமிக்கவும் கூட்டணித் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக மும்பை கூட்டத்தில் இறுதி முடிவெடுக்கப்பட உள்ளது. ஒருவேளை இண்டியா கூட்டணியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக நிதிஷ் குமார் தேர்வு செய்யப்பட்டால், முதல்வர் பதவியை தற்போது துணை முதல்வராக பதவி வகிக்கும் ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்ஜேடி) தலைவர் தேஜஸ்வி யாதவிடம் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், “பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை இணைக்கவே நான் விரும்பினேன். இண்டியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக மாற எனக்கு ஆசை இல்லை” என்று பிஹார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் திட்டவட்டமாகத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

ஆளும் பாஜகவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ‘இண்டியா’ கூட்டணி கொண்டு வந்ததற்கு பின்னர் இந்த மூன்றாவது சந்திப்பு நிகழ்வது குறிப்பிடத்தக்கது.

பாஜக தலைமையில் ஆலோசனை: இதனிடையே, மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக கூட்டணியும் மும்பையில் இரண்டு நாள் ஆலோசனைக் கூட்டத்தை நடத்துகிறது. இதில், மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து விவாதிக்கப்படுகிறது. இதன் முதல் கூட்டம், மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயின் அதிகாரபூர்வ இல்லத்தில் நாளை (ஆக.31) இரவு உணவுக்கு பின்னர் நடைபெற இருக்கிறது. நாளை மறுநாள் (செப்.1) நடக்கும் கூட்டத்தில் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளுக்கான வியூகங்கள் அமைப்பது குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. இந்தக் கூட்டங்களுக்கு முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர்களான தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவார் தலைமை தாங்குவார்கள். மகாராஷ்டிராவில் 48 மக்களவைத் தொகுதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE