இடைவிடாத மழையால் அசாமில் மீண்டும் வெள்ளம்: 1.9 லட்சம் மக்கள் பாதிப்பு

By செய்திப்பிரிவு

குவாஹாட்டி: அசாமில் கனமழை காரணமாக 45 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. இந்நிலையில் அன்று மாலை முதல் பெய்த தொடர் மழையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரே நாளில் 1.9 லட்சமாக,அதாவது 4 மடங்கு உயர்ந்தது.

மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் திங்கட்கிழமை மாலை வெளியிட்ட அறிக்கையின்படி, பிரம்மபுத்ரா மற்றும் அதன் துணை ஆறுகளில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம் காரணமாக விஸ்வநாத், சிராங், டாரங், தேமாஜி, துப்ரி, திப்ரூகர், கோலாகட், ஜோர்கட், லக்கிம்பூர், மஜுலி, மோரிகாவ்ன், நாகாவ்ன். நல்பாரி, சிவசாகர், சோனித்பூர், தமுல்பூர், உடல்குரி ஆகிய 17 மாவட்டங்கள் பாதிக்கப் பட்டுள்ளன. இம்மாவட்டங்களில் 522 கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. 8,086 ஹெக்டேர்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள் (67,955) மற்றும் குழந்தைகள் (38,163) ஆவர்.

சிவசாகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மீன் பிடிக்கச் சென்ற 67 வயது முதியவர் ஒருவர் நீரில் மூழ்கி இறந்தார். இதனால் இப்பருவத்தில் வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE