தமிழக அரசின் கோரிக்கையின்படி காவிரியில் உரிய தண்ணீரை திறந்துவிட கர்நாடகம் மறுப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: குறுவை சாகுபடியை காப்பாற்ற காவிரியில் 24 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிட தமிழகம் கோரிக்கை விடுத்த நிலையில் அணைகளில் குறைவான அளவில் தண்ணீர் இருப்பதை காரணம் காட்டி காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 5000 கன அடி நீரை திறந்துவிடுமாறு கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தர விட்டுள்ளது.

டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில், காவிரியில் அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்துக்கு விநாடிக்கு 5000 கன அடி நீரை திறந்துவிட பரிந்துரை செய்யப்பட்டது. இதனை ஏற்க மறுத்த தமிழக அரசு, நிலுவையில் உள்ள 54 டிஎம்சி நீரை திறந்துவிட உத்தரவிடுமாறு வலியுறுத்தியது.

இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 23வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் டெல்லியில் உள்ள நீர்வளத்துறை அமைச்சக அலுவலகத்தில் நேற்றுநடைபெற்றது. இதில் தமிழக நீர்வளத்துறை செயலாளர் சந்தீப்சக்சேனா, காவிரி தொழில்நுட்பக்குழுத் தலைவர் சுப்பிரமணியம் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் பங்கேற்றனர். கர்நாடகா, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகள் காணொலி வாயிலாக பங்கேற்றனர்.

24 ஆயிரம் கன அடி நீர்: அப்போது தமிழக நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா,‘‘காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த இறுதி தீர்ப்பின்படி ஆகஸ்ட் மாதத்தில் வழங்க வேண்டியதில் 54 டிஎம்சிதண்ணீர் இன்னும் வழங்கப்படவில்லை. இதனால் தமிழகத்தில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளில் தற்போது உள்ள நீரை உரிய முறையில் பங்கீடு செய்ய வேண்டும். அடுத்த 15 நாட்களுக்கு நாள்தோறும் 24 ஆயிரம் கன அடி நீர்திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட‌ வேண்டும்'' என வலியுறுத்தினார்.

போதிய மழை இல்லை: அதற்கு கர்நாடக அரசின் அதிகாரிகள், ‘‘கர்நாடகாவில் நிகழாண்டில் போதிய அளவில் மழை பொழியவில்லை. இதனால் கிருஷ்ணராஜசாகர், கபினி உள்ளிட்ட 4 அணைகளும் நிரம்பவில்லை. அணைகளில் குறைவான அளவில் நீர்இருப்பதால் கர்நாடக விவசாயிகளின் பாசனத்துக்கே நீர் திறந்துவிடப்படவில்லை. எனவே தமிழகத்துக்கு தற்போதைய நிலையில் 24 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிட வாய்ப்பு இல்லை. தினசரி 3 ஆயிரம் கன அடி நீரை திறந்துவிடுகிறோம்'' என தெரிவித்தனர்.

நிறைவாக பேசிய காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தர், ‘‘கர்நாடக அணைகளின் நீர் இருப்பு, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் குறைந்த அளவில் பதிவான‌ மழை ஆகியவற்றை கருத்தில் கொள்கிறோம். அதேவேளையில் தமிழகத்தில் குறுவை சாகுபடிக்கு நீர் தேவைப்படுகிறது. எனவே, தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்களுக்கு தினமும் விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்க வேண்டும்’’ என உத்தரவிட்டார்.

உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு: இதனிடையே தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு நாளை மறுநாள் (செப்.1ம் தேதி) விசாரணைக்கு வருகிறது. அதனால் காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக‌ அணைகளின் நீர் இருப்பு குறித்த அறிக்கையை இன்று அல்லது நாளை தாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளது. அந்தஅறிக்கையின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் இவ்வழக்கில் முடிவெடுக்கும் என தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE