பெங்களூரு: நடிகர் ரஜினிகாந்த் திரைத் துறையில் நுழைவதற்கு முன்பு பெங்களூருவில் நடத்துநராக பணியாற்றிய பேருந்து பணிமனைக்கு சென்று, அங்கிருந்தவர்களுடன் எளிமையாக பேசி மகிழ்ந்தார்.
இந்திய திரையுலகில் உச்ச நட்சத்திரமாக திகழும் நடிகர் ரஜினிகாந்த் (72) பெங்களூருவை சேர்ந்தவர். அவர் சென்னைக்கு நடிக்க வருவதற்கு முன்னர் பெங்களூரு போக்குவரத்து கழக பேருந்தில் நடத்துநராக பணியாற்றினார். கடந்த 1970களில் தமிழ் திரையுலகில் நுழைந்து பிரபலமானார்.அதன் பின்னர் அவர் மாறு வேடங்களில் பெங்களூருவுக்கு சென்று நண்பர்களை சந்தித்து வந்தார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் பெங்களூரு செல்வதை குறைத்துக்கொண்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பெங்களூரு அருகேயுள்ள தேவனஹள்ளியில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பங்கேற்றார்.
இதையடுத்து நேற்று காலை 10 மணிக்கு சாம்ராஜ்பேட்டைக்கு சென்று நண்பர் ராஜ்பகதூரை சந்தித்தார். இவர் ரஜினி நடத்துநராக பணியாற்றிய பேருந்தில் ஓட்டுநராக பணியாற்றியவர்.
பின்னர் சாம்ராஜ்பேட்டை சீதாபதி ராயர் மடத்துக்கு சென்று பூஜை செய்தார். இதையடுத்து ரஜினிகாந்த் இளமை காலத்தில் காபி அருந்திய மையாஸ் உணவகத்தில் காபி அருந்தினார்.
அதன் பின் நண்பர் ராஜ்பகதூரை அழைத்துக்கொண்டு, நடத்துநராக பணியாற்றிய ஜெயநகர் பேருந்து பணிமனைக்கு சென்றார்.
அந்த கால நினைவலைகள்: ரஜினியின் திடீர் வரவால் அங்கிருந்த பணிமனை ஊழியர்கள், ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் எளிமையாக வந்த அவருடன் ஏராளமானோர் கை குலுக்கினர். சிலர் காலில் விழுந்து ஆசி வாங்கிய நிலையில் செல்போனில் 'செல்பி' எடுத்துக்கொண்டனர்.
அப்போது ரஜினி கூறும்போது, ‘‘அந்த காலத்தில் இந்த கட்டிடங்கள் இல்லை. எங்களது பேருந்தை அங்குதான் நிறுத்துவோம். நான் அங்குதான் சாப்பிட்டு, மரத்தடியில் படுத்திருப்பேன்'' என மிக இயல்பாக பேசினார். அங்கிருந்து நேராக விமான நிலையம் சென்ற ரஜினி சென்னைக்கு திரும்பினார்.
இதுகுறித்து ரஜினியின் நண்பர் ராஜ்பகதூர் கூறும்போது, ‘‘ரஜினியின் திடீர் வருகையால் நானே திக்குமுக்காடி விட்டேன். அவர் வருவது எனக்கு முன் கூட்டியே தெரியாது. திடீரென வந்த அவர் அந்த காலத்தில் சுற்றித் திரிந்த இடங்களை பார்க்க விரும்பினார்.
ஜெயநகர் பேருந்து பணி மனைக்கு சென்றோம். அங்கு அனைவருடனும் மிக எளிமையாக பேசி மகிழ்ந்தார். விரைவில் பெங்களூரு வந்து பழைய நண்பர்களை சந்திப்பதாகவும் கூறியுள்ளார்'' என்றார்.
பெங்களூருவில் போக்குவரத்து கழக ஊழியர்களுடன் ரஜினிகாந்த் உரையாடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago