வீட்டு உபயோக சிலிண்டர் விலை குறைப்பு: பாஜக VS காங்கிரஸ் மோதல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஓணம் மற்றும் ரக்ஷாபந்தன் பரிசு எனக் கூறி மத்திய அரசு வீட்டு உபயோக சிலிண்டர்விலையை குறைத்துள்ளது. இதுகுறித்து வாக்கு குறையத் தொடங்கினால் பரிசு பொருள்கள் விநியோகம் தொடங்கி விடும் என மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.

சிலிண்டர் விலைக்குறைப்பு குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் இந்தியில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், "வாக்குகள் குறையத்தொடங்கும் போது பரிசுப் பொருள்கள் விநியோகம் தொடங்கிவிடும். மக்கள் சிரமப்பட்டு உழைத்தப் பணத்தைக் கொள்ளையடித்த இரக்கமற்ற மோடி அரசு, தற்போது தாய்மார்கள் மற்றும் சகோதரிகளிடம் போலியான அக்கறையை வெளிப்படுத்துகிறது. ரூ.400-க்கு விற்பனையாகி வந்த சிலிண்டரை கடந்த 9 1/2 ஆண்டுகளில் ரூ.1,100 வரை உயர்த்தி சாமானிய மக்களின் வாழ்க்கையை சீரழித்து வந்தார்கள். அப்போது ஏன் இந்தப் பாசப்பரிசு நினைவுக்கு வரவில்லை.

140 கோடி மக்களை கடந்த ஒன்பதரை ஆண்டுகளாக சித்தரவதை செய்துவிட்டு, கடைசி நேரத்தில் வழங்கப்படும் தேர்தல் லாலிப்பாப்கள் வேலை செய்யாது என்று பாஜக புரிந்து கொள்ளவேண்டும். உங்களின் 10 ஆண்டு பாவங்கள் கழுவப்படாது. பாஜக அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள பணவீக்கத்தை எதிர்கொள்வதற்காக, காங்கிரஸ் கட்சி முதலில் பல்வேறு மாநிலங்களில் ஏழை மக்களுக்கு ரூ.500-க்கு சிலிண்டர் வழங்க இருக்கிறது. ராஜஸ்தான் போன்ற பல மாநிலங்களில் ஏற்கனவே அது அமல்படுத்தப்பட்டுவிட்டது. 2024-ல் நாட்டு மக்களிடம் ஏற்பட்டிருக்கும் கோபம் இந்த ரூ.200 மானியத்தால் குறைந்து விடாது என்று பாஜக அரசு புரிந்து கொள்ளவேண்டும். ‘இண்டியா’ மீதான பயம் நல்லது மோடி ஜி. மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். பணவீக்கத்தை விரட்டியடிக்க பாஜகவை வெளியேற்றுவதே ஒரே வழி" இவ்வாறு கார்கே கூறியுள்ளார்.

மத்திய அரசின் சிலிண்டர் விலை குறைப்பு பற்றியும் இண்டியா கூட்டணி பற்றியும் கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, "எங்களின் சகோதரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள தனித்துவமான பரிசுக்காக பிரதமர் மோடிக்கு நான் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதுகுறித்த எதிர்க்கட்சிகளின் கருத்துகளுக்கு நான் கூறுவது, நீங்கள் தொடர்ந்து உங்களின் கூட்டங்களை நடத்துங்கள். அது நாட்டுமக்களுக்கு நல்லது. ஆதரவற்ற நிலையில் இருந்து ஆதரவைத் தேடுபவர்கள் குறித்து வேறென்ன நான் சொல்லமுடியும்" என்று தெரிவித்துள்ளார்.

வீட்டு உபயோக சிலிண்டர் விலை குறைவு: முன்னதாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், "வீட்டு உபயோக சிலிண்டர்களைப் பயன்படுத்தும் அனைத்துப் பயனாளிகளும் பயன் பெறும் வகையில் சிலிண்டரின் விலையில் ரூ. 200 குறைக்க பிரதமர் நரேந்திர மோடி முடிவெடுத்துள்ளார். ஓணம் மற்றும் ரக்ஷா பந்தனை முன்னிட்டு நமது நாட்டின் பெண்களுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் பரிசு இது" என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE