‘உங்களை நிரூபிப்பதை விட, தேடிக் கண்டடையுங்கள்’ - பயிற்சி வகுப்பு மாணவர்களுக்கு ஆனந்த் மகிந்திரா அறிவுரை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மாணவர்களின் தற்கொலை செய்திகள் மிகவும் தொந்தரவு செய்கிறது என வேதனை தெரிவித்துள்ள தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா, போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் ‘உங்களை நிரூபிப்பதற்கு பதிலாக உங்களை நீங்களே கண்டடையுங்கள்’ என்று அறிவுரை கூறியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு தயராகிக்கொண்டிருந்த வளரிளம் மாணவர்கள் இருவர் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டனர். இந்நிலையில் கோட்டாவில் 2023 ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் தற்கொலைகள் குறித்து தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா தனது எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். தனது பதிவில் அவர், "உங்களைப் போலவே நானும் இந்தச் செய்தியைக் கேட்டு கலக்கமடைந்துள்ளேன். பல பிரகாசமான எதிர்காலங்கள் கண்முன்னே அழிந்து போவதைக் காண்பது பெரும் சோகம். பகிர்ந்து கொள்வதற்கு என்னிடம் பெரிய அளவிலான ஞானம் எதுவும் இல்லை. ஆனால் கோட்டாவில் உள்ள ஒவ்வொரு மாணவனுக்கும் நான் சொல்லிக்கொள்வது ஒன்றே ஒன்றுதான். இந்த காலக்கட்டத்தில் உங்களுடைய குறிக்கோள் உங்களை நிரூபிப்பது இல்லை. மாறாக உங்களைக் கண்டடைவது.

தேர்வில் தோல்வி அடைவது தன்னைத் தேடியலையும் பணத்தின் ஒரு சிறு பகுதியே. அதன் அர்த்தம் உங்களுடைய உண்மையான திறமை வேறெங்கோ உள்ளது. தொடர்ந்து தேடுங்கள் தொடர்ந்து பயணியுங்கள். இறுதியில் உங்களிடம் உள்ள சிறந்ததை நீங்கள் கண்டடைவீர்கள், அதை வெளிக்கொண்டு வருவீர்கள்" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான ஜேஇஇ மற்றும் மருத்துவக்கல்லூரியில் சேர்வதற்கான நீட் தேர்வு போன்ற நுழைவுத் தேர்வுகளை எழுதுவதற்காக பயிற்சி நிறுவனங்கள் அதிகம் இருக்கும் ராஜஸ்தானின் கோட்டா நகருக்கு ஆண்டொன்றுக்கு 2 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில், கோட்டாவிலுள்ள பயிற்சி மையங்களில் அதிகரித்து வரும் மாணவர்களின் தற்கொலைகளைப் பற்றி ஆராய இந்த மாதத் தொடக்கத்தில் உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வி முதன்மைச் செயலாளர் பவானி சிங் தேத்தா தலைமையில் ஒரு குழுவினை அமைத்து ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் உத்தரவிட்டிருந்தார். இந்தக்குழு கோட்டா சென்று ஆய்வு செய்த பின்னர் 15 நாட்களுக்குள் தங்களது அறிக்கையை சமர்ப்பிக்கும்.

இதனிடையே கோட்டா தொடர் தற்கொலைகளின் வரிசையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து, பவானி சிங் தேத்தா தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் கூட்டம் காணொலி வாயிலாக திங்கள்கிழமை நடந்தது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஓம் பிரகாஷ் பங்கர், பயிற்சி நிறுவனங்களின் பிரதிநிதிகள், விடுதி உரிமையாளர்கள், சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE