காவிரி ஒழுங்காற்று குழு கூறியபடி தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது: கர்நாடகா

By செய்திப்பிரிவு

பெங்களூரு: காவிரி ஒழுங்காற்று குழு கூறியபடி, தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடகா தெரிவித்துள்ளது.

தமிழகத்துக்கு காவிரியில் இருந்து 15 நாட்களுக்கு 5000 கனஅடி தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு நேற்று உத்தரவிட்டது. இந்த உத்தரவு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில அமைச்சர் எம்.பி.பாடீல், "காவிரியில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டுள்ளது. ஆனால், எங்களிடம் தண்ணீர் இல்லை. காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவு நிறைவேற்ற முடியாத ஒன்று. எனவே, நாங்கள் சட்ட வழியைப் பின்பற்ற உள்ளோம்.

காவிரி விவகாரத்தில் அறிவியல் பூர்வமான மற்றும் நடைமுறைப்படுத்தக்கூடிய திட்டத்தை முன்வைத்தால்தான் அது சாத்தியமாகும். இல்லாவிட்டால், அனைவருக்கும் சங்கடம்தான் ஏற்படும். கர்நாடகாவின் குடிநீர் தேவை மற்றும் விவசாயத் தேவைக்கு இருக்கும் தண்ணீரை தமிழகத்துக்குக் கொடுக்க வேண்டும் என்கிறார்கள். நாங்கள் எவ்வாறு கொடுக்க முடியும்?" எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சென்னையில் இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், "காவிரி ஒழுங்காற்று குழுவிடம், விநாடிக்கு 24 ஆயிரம் கனஅடி, வீதம் 10 நாட்களுக்கு தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று ஒரு கோரிக்கையை வைத்தோம். ஆனால், அந்தக் குழு, 15 நாட்களுக்கு 5000 கனஅடி தண்ணீர் திறக்க சிபாரிசு செய்திருக்கிறது. அதுபோதுமானது அல்ல என்பது நம்முடைய நிலைப்பாடு. தண்ணீர் திறப்பு 24,000 கன அடியாக இருந்தால்தான், பயிர்கள் கருகாமல் இருக்கும்" என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE