கோட்டா தற்கொலைகள் | மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க ஆய்வுக் குழு பட்டியலிட்ட பரிந்துரைகள்

By செய்திப்பிரிவு

கோட்டா: ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பயிற்சி மையங்களில் நடந்த தற்கொலைகளைத் தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகளை ஆராய அமைக்கப்பட்ட குழு, பயிற்சி மையங்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை பரிந்துரைத்துள்ளது.

அதில் மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க வேடிக்கை நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்வது, தன்னம்பிக்கையை ஊக்குவிக்கும் வீடியோக்களை பதிவேற்றுவது, பாடத்திட்டங்களை குறைப்பது போன்ற நடவடிக்கைகளை பயிற்சி மையங்கள் எடுக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளது.

ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் கோட்டாவிலுள்ள பயிற்சி மையங்களில் அதிகரித்து வரும் மாணவர்களின் தற்கொலைகளைப் பற்றி ஆராய இந்த மாதத் தொடக்கத்தில் உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வி முதன்மைச் செயலாளர் பவானி சிங் தேத்தா தலைமையில் ஒரு குழுவினை அமைத்து உத்தரவிட்டிருந்தார். இந்தக்குழு கோட்டா சென்று ஆய்வு செய்த பின்னர் 15 நாட்களுக்குள் தங்களது அறிக்கையை சமர்ப்பிக்கும். இந்நிலையில், கோட்டா தொடர் தற்கொலைகளின் வரிசையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து, பவானி சிங் தேத்தா தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் கூட்டம் காணொலி வாயிலாக திங்கள்கிழமை நடந்தது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஓம் பிரகாஷ் பங்கர், பயிற்சி நிறுவனங்களின் பிரதிநிதிகள், விடுதி உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்தக்கூட்டத்தில், மாணவர்களுக்கு ஏற்படும் அழுத்தங்களைக் குறைக்க பயிற்சி நிறுவனங்களில் உள்ள பாட வல்லுநர்களும் பாடங்களைக் குறைப்பதற்கு பரிந்துரை செய்யவேண்டும். உதவித்தேவைப்படும், பாதிக்கப்பட்ட மாணவர்களைக் கண்டறிவதற்காக அலுவலர்கள் மாணவர்கள் கூகுள் படிவத்தினை தினமும் நிரப்பக் கேட்டுக்கொள்ள வேண்டும் என்று ஆய்வுக்குழு தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஓம் பிரகாஷ் பங்கர் கூறுகையில்,"வகுப்புகள் நிறைவடைந்ததும் பயிற்சி நிறுவனங்கள் வேடிக்கை நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். பயிற்சி நிறுனங்கள் மாணவர்கள் எளிதில் கையாளும் வகையில் தன்னம்பிக்கையைத் தூண்டும் வீடியோக்களை கட்டமாயம் அப்லோடு செய்யவேண்டும். வகுப்புகளில் சந்தேகம் இருக்கும் மாணவர்கள், தேர்வுகளில் மந்தமாக செயல்படும், தேர்வுகள் மற்றும் வகுப்புகளை புறக்கணிக்கும் மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு ஆலேசானைகள் வழங்க பயிற்சி நிறுனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

மாணவர்களின் தற்கொலைகளைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த மனநலமருத்துவர் விநாயக் பதக்," பெரும்பாலான நிறுவனங்கள் வழிகாட்டுநெறிமுறைகளை பின்பற்றுவதில்லை. பயிற்சி நிறுவனங்களில் மதிப்பெண்கள் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுகின்றன. அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. இது பலவீனமான மாணவர்களிடம் தாழ்வெண்ணங்களை உருவாக்கிறது என்று தெரித்தார்.

இதனிடையே, ராஜஸ்தான் அமைச்சர் பிரதாப் சிங் கச்சாவாரியாஸ் பயிற்சி நிறுவனங்களை பணத்திலேயே குறியாக இருப்பதாக கடுமையாக சாடினார். அவர், "நீங்கள் (பெற்றோர்கள்) பயிற்சி நிறுவனங்களுக்கு பணத்தினை வழங்குகின்றீர்கள், அவர்கள் உங்கள் குழந்தைகளை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குகிறார்கள்" என்றார்.

கோட்டா மோஷன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி நிதின் விஜய் கூறுகையில்,"பயிற்சி நிறுவனங்கள் மாஃபியாக்கள் இல்லை. அவர்கள் கல்வியின் சின்னங்கள். கட்டண நிர்ணயம் எல்லா இடங்களிலும் பின்பற்றப்படுகின்றது. அரசு நிறுவனங்களிலும் அது உள்ளது. நாங்கள் போட்டித்தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்கிறோம். அத்தகையத் தேர்வுகள் நாட்டுக்கு சிறந்த அறிவாளிகளைத் தருகின்றன.இது ஒரு நட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. இத்தகைய சம்பவங்கள் நாடு முழுவதும் நடக்கின்றன. இது ஒரு தேசிய பிரச்சினை. பெற்றோர்களின் அழுத்தமும், அதிமான எதிர்பார்ப்பும் இத்தைய சம்பவங்களுக்கு வழிவகுக்கின்றன. இதுகுறித்து நாங்களும் கவலை கொள்கின்றோம்" என்று கூறினார்.

முன்னதாக ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் ஞாயிற்றுக்கிழமை வாரத்தேர்வு எழுதிய மாணவர்கள் அவீஷ்கர் சாம்பாஜி கஸ்லே மற்றும் ஆதர்ஷ் ராஜ் தற்கொலை செய்து கொண்டனர். அவீஷ்கர் பயிற்சி மையத்தின் 6வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். சில மணி நேரங்களுக்குப் பின்னர் பிஹாரைச் சேர்ந்த ஆதர்ஷ் ராஜ் என்ற மாணவரும் தற்கொலை செய்து கொண்டார். அவர் தான் வசித்து வந்த வாடகை வீட்டின் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோட்டாவில் இந்த 2023 ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர். கோட்டா நகரில் உள்ள பல்வேறு பயிற்சி மையங்களிலும் 3 லட்சம் மாணவர்கள் நீட், ஐஐடி ஜெஇஇ உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கும் பயிற்சி பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE