இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்க வாய்ப்பில்லை: சமாஜ்வாதி கட்சி தகவல்

By செய்திப்பிரிவு

போபால்: வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணியை எதிர்கொள்ள 26 எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர்ந்து ‘இண்டியா’ என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன.

இந்நிலையில், ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய 4 மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. ம.பி.யில் தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில் பாஜக 39 வேட்பாளர்களையும் பகுஜன் சமாஜ் கட்சி 7 வேட்பாளர்களையும் அறிவித்துள்ளன. உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி, உ.பி. எல்லைக்கு அருகில் உள்ள 4 தொகுதிகளுக்கு கடந்த 23-ம் தேதி வேட்பாளர்களை அறிவித்தது.

இந்நிலையில் இக்கட்சி விந்தியா பிராந்தியத்தில் 2 தொகுதிகளுக்கு நேற்று வேட்பாளர்களை அறிவித்தது. இதன்மூலம் அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் இண்டியா கூட்டணியின் ஓர் அங்கமாக ம.பி.யில் காங்கிரஸுடன் சமாஜ்வாதி கூட்டணி அமைக்குமா என்ற கேள்விக்கு அத்தகைய வாய்ப்பு இல்லை என்று சமாஜ்வாதி மாநிலத் தலைவர் ராமாயண் சிங் படேல் கூறினார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “ம.பி.யில் இதுவரை கூட்டணிக்கான வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. தேசிய தலைவர் இதுகுறித்து முடிவு செய்வார்” என்றார்.

கடந்த 2018-ல் நடைபெற்ற ம.பி. தேர்தலில் சமாஜ்வாதி ஓரிடத்தில் வென்றது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE