மக்களவைத் தேர்தலில் மஜத‌ தனித்து போட்டி: முன்னாள் முதல்வர் குமாரசாமி திட்டவட்டம்

By இரா.வினோத்


பெங்களூரு: வரும் 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி, இண்டியா கூட்டணியை உருவாக்கியுள்ளது. இதில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி சேரவில்லை. இதனால் அக்கட்சி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையும் என கூறப்பட்டது.

இதுகுறித்து கர்நாடக முன்னாள் முதல்வரும், மஜத மூத்த தலைவருமான‌ குமாரசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: கர்நாடகாவின் நலனில் காங்கிரஸ், பாஜக‌ ஆகிய இரு கட்சிகளுக்கும் அக்கறை இல்லை. காவிரி, மகதாயி உள்ளிட்ட நதிநீர்ப் பிரச்சினைகளில் கர்நாடகாவின் நலனை பின்னுக்கு தள்ளியுள்ளனர். எனவே இரு கட்சிகளையும் கர்நாடக மக்கள் வெறுக்கின்றனர். அதனால் நாங்கள் இந்த இரு கட்சிகளுடன் ஒருபோதும் இணைய மாட்டோம்.

வரும் மக்களவை தேர்தலை பொறுத்தவரை மஜத கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும். 28 தொகுதிகளுக்கான‌ வேட்பாளர்கள் தேர்வு செய்யும் பணிகளை தொடங்கியுள்ளோம். நாங்கள் அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என நான் கூறவில்லை.

அதேவேளையில் குறைந்தபட்சம் 5 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என நம்புகிறேன். எங்களின் முடிவால் மஜத தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். விரைவில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க இருக்கிறேன். இவ்வாறு குமாரசாமி தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE