திருமலையில் கூண்டில் சிக்கிய 4-வது சிறுத்தை

By என். மகேஷ்குமார்

திருமலை: திருமலை அலிபிரி மலைப்பகுதியில் வைக்கப்பட்ட கூண்டில் 4-வது சிறுத்தை சிக்கியுள்ளது.

திருப்பதி சேஷாசலம் வனப் பகுதியில் சமீப காலமாக சிறுத்தைகள், கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனிடையே, புதிதாக அறங்காவலராக பதவியேற்ற திருப்பதி எம்.எல்.ஏ.வான கருணாகர் ரெட்டி, திருமலைக்கு மலையேறி செல்லும் பக்தர்களுக்கு கைத்தடி வழங்கப்படும் என அறிவித்தார். இதற்கு பக்தர்களிடையே கடும் ஆட்சேபம் எழுந்துள்ளது. இந்நிலையில், சிறுத்தையை பிடிக்க கூண்டுகள் அமைக்கப்பட்டன.

கடந்த 2 மாதங்களில் மட்டும் 3 சிறுத்தைகள் கூண்டுக்குள் அகப்பட்டன. இவை திருப்பதி எஸ்.வி. வனப்பூங்காவில் ஒப்படைக்கப்பட்டன. 7-வது மைல், லட்சுமி நரசிம்மர் கோயில் பகுதிகளில் 320 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. சிறுத்தை பீதியால் தற்போது இரு மலைப்பாதைகளிலும் பக்தர்களின் வரவு குறைந்து விட்டது.

6 கூண்டுகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு திருமலை அலிபிரி 7-வது மைல் பகுதியில் 4-வது சிறுத்தை சிக்கியது. இந்த சிறுத்தையும் எஸ்.வி. வனப்பூங்காவில் விடப்பட்டது.

இது தொடர்பாக தலைமை வனத்துறை பாதுகாப்பு அதிகாரி நாகேஸ்வர ராவ் கூறுகையில், ‘‘இதுவரை பிடிப்பட்ட சிறுத்தைகளில் சிறுமி லக்‌ஷிதாவை கொன்ற சிறுத்தை எது என்பதைகண்டறிய டிஎன்ஏ பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE