மாநில மக்கள்தொகையை கருத்தில்கொண்டால் உ.பி.யில் பலாத்கார சம்பவங்கள் குறைவே: முலாயம்

உத்தரப் பிரதேசத்தில் மக்கள்தொகை அதிகமாக உள்ளது, ஆனால் மாநில மக்கள்தொகையோடு ஒப்பிட்டுப் பார்த்தால், பலாத்கார சம்பவங்கள் குறைவாகத் தான் உள்ளன என்று சமாஜ்வாதி கட்சித் தலைவரும் அம்மாநில முன்னாள் முதல்வருமான முலாயம் சிங் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் பலாத்காரச் சம்பவங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் குறித்த செய்திகள் அவ்வப்போது வெளிச்சத்திற்கு வருகின்றன.

சிறுமிகள், இளம் வயது பெண்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பு பெண்களும் இதனால் பாதிக்கப்படுவதாகவும், அங்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

இந்நிலையில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, "உத்தரபிரதேசத்தில் மக்கள் தொகை அதிகம் உள்ளது. ஆனால் அதனோடு ஒப்பிட்டுப் பார்த்தால், பலாத்காரச் சம்பவங்கள் குறைவாகத் தான் நடக்கின்றன" என்றார்.

சமாஜ்வாதி தலைவரின் இந்த கருத்து மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது குறித்து அந்த கட்சியை சேர்ந்த மற்றொரு மூத்த தலைவர் நரேஷ் அகர்வால் முலாயம் சிங்கின் கருத்தை நியாயப்படுத்தும் விதமாக கருத்து தெரிவித்துள்ளார்.

நரேஷ் அகர்வால் கூறும்போது, " உத்தரபிரதேசம் மக்கள் தொகை அதிகம் உள்ள மாநிலம். இங்கு தினசரி நடக்கும் வன்முறைகளை கண்கானிக்க முடியாது. இங்கு மக்கள் தொகை 21 கோடி ஆகும். நாடெங்கும் உள்ள பலாத்கார குற்றங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால், இங்கு பலாத்கார சம்பவங்கள் குறைவாகத் தான் நடக்கின்றன.

எனவே மாநிலத்தில் ஒவ்வொரு குற்றத்தையும் கண்காணிக்க முடியாது. குற்றங்கள் குறித்து புகார் வந்தவுடன், சம்பந்தப்பட்ட போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்தியா சுதந்திரம் பெற்றது முதல், எந்த மாநிலத்திலும் குற்றங்கள் நடைபெறவில்லை என்று சொல்ல முடியாது . அனைத்து மாநிலங்களிலும் குற்றங்கள் நடக்கின்றன. ஆனால், உத்தரப்பிரதேசத்தில் நடந்தால், அதனை எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் பெரிதுப் படுத்துகின்றனர்.

பெங்களூருவில் கூட சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். பலாத்காரம் என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. இந்த விவகாரத்தில் அரசு, தன்னைத் தானே சுயப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்" என்றார்.

இதனிடையே, சமாஜ்வாதியின் மற்றொரு தலைவரும் பெண்கள் தேசிய ஆணையத்தின் உறுப்பினருமான ஷோபா ஓசா, நாட்டின் நிலைமையை பற்றி தெரிந்துக்கொள்ள பெரிய அளவில் எதுவும் செய்யத் தேவையில்லை. தினசரி செய்தித்தாளை படித்தாலே தெரிந்திவிடும். உத்தரப்பிரதேசத்தில் தினம் இரண்டு அல்லது மூன்று பலாத்கார செய்தியாவது வெளியாகிறது என்று கூறியுள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE