ஆட்டோமொபைல், மருந்து, சுற்றுலா துறைகள் வேகமாக வளரும்: பிரதமர் மோடி நம்பிக்கை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஆட்டோமொபைல், மருந்துப் பொருட்கள், சுற்றுலா துறைகள் வேகமாக வளரும் என எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியப் பொருளாதாரம் விரைவான வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அரசுத் துறைகளில் 51,000 பணிகளுக்கான நியமனக் கடிதங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது: "இந்தியப் பொருளாதாரம் விரைவான வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. ஆட்டோமொபைல், மருந்துப்பொருட்கள், சுற்றுலா துறைகள் வேகமாக வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 2030ஆம் ஆண்டுக்குள் சுற்றுலாத் துறை மட்டும், ரூ.20 லட்சம் கோடி அளவுக்கு நமது பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம், இந்த துறையில் 13-14 கோடி புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் சாத்தியம் இருக்கிறது.

இந்த பத்தாண்டுகளில் உலகின் முதல் மூன்று பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா உருவாகி, சாமானியர்களுக்கு பலன்களை அளிக்கும். ஒவ்வொரு துறையும் வளர்ச்சி அடைய வேண்டும். உணவு முதல் மருந்துப்பொருட்கள் வரை, விண்வெளி முதல் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வரை ஒவ்வொரு துறையும் முன்னேறும் போது பொருளாதாரம் வளரும். மருந்துத் துறை தற்போது ரூ.4 லட்சம் கோடி அளவுக்கு நமது பொருளாதாரத்திற்கு பங்களிப்பை அளித்து வருகிறது. இந்தத் துறை 2030ஆம் ஆண்டுக்குள் ரூ.10 லட்சம் கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மருந்து உற்பத்தித் துறைக்கு நிறைய இளைஞர்கள் தேவைப்படுவார்கள். வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்.

ஆட்டோமொபைல் துறையும் வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. இதை முன்னெடுத்துச் செல்ல இளைஞர் சக்தி தேவைப்படும். எனவே, இந்த துறையில் அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாகும். உத்தரப் பிரதேசம் ஒரு நல்ல உதாரணம். இங்கு சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட்டுள்ளதை அடுத்து, முதலீடுகள் அதிக அளவில் வந்து கொண்டிருக்கின்றன. பாதுகாப்பான சூழ்நிலை, சட்டத்தின் ஆட்சி ஆகியவை வளர்ச்சியை விரைவுபடுத்துகிறது; மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது; முதலீடுகளை ஈர்க்கிறது. குற்றங்கள் அதிகமாக நடைபெறம் மாநிலங்கள் முதலீடுகளை குறைவாகவே ஈர்க்கின்றன" என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE