காங்கிரஸின் பிரதமர் வேட்பாளர் ‘பேரழிவுக்கான பயணச்சீட்டு’ - இண்டியா கூட்டணியை கேலி செய்யும் பாஜக

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: அடுத்தாண்டு நடைபெற இருக்கும் மக்களைத் தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள நிலையில், அதனை பேரழிவுக்கான பயணச் சீட்டு என்று கார்ட்டூன் வெளியிட்டு பாஜக கேலி செய்திருக்கிறது.

பாஜகவின் எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் இன்று (திங்கள்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அந்த கேலிச் சித்திரத்தில், ராகுல் காந்தி விமானம் ஒன்றில் பறப்பது போல வரையப்பட்டுள்ளது. அதன் கீழே ‘பிராண்ட் நியூ (ஓல்டு). ஹாட் ஏர் இண்டியா - உங்கள் பேரழிவுக்கான பயணச்சீட்டு’என்று கூறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் காங்கிரஸ் அதன் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை அறிவித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக வரும் மக்களவைத் தேர்தலுக்கான பிதரமர் வேட்பாளர் ராகுல் காந்தியே என்று ராஜஸ்தான் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அசோக் கெலாட் தெரிவித்திருந்தார். புதிதாக தொடங்கப்பட்டுள்ள 26 கட்சிகளின் கூட்டணியான இண்டியா குறித்து பேசிய அவர், "அனைத்துக் கட்சிகளின் ஆலோசனை மற்றும் விவாதங்களுக்கு பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஒவ்வொரு வாக்குப்பதிவின் போதும் உள்ளூர் நிலவரம் ஆதிக்கம் செலுத்தும். ஆனால் நாட்டின் தற்போதைய சூழ்நிலை அனைத்து தரப்பினர் மீதும் ஒரு அழுத்தத்தை உருவாக்கியுள்ளது. பொதுமக்கள் இந்த அழுத்தத்தை உருவாக்கியுள்ளனர். அதன்விளைவாக அனைத்துக் கட்சிகளின் கூட்டணி உருவாகியுள்ளது" என்றார்.

கெலாட்டின் இந்த அறிவிப்பினைத் தெடார்ந்து பாஜக இவ்வாறு கேலிச்சித்திரம் மூலம் வெளியிட்டு எதிர்வினையாற்றியுள்ளது.

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்கொள்ளும் வகையில் , எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 26 கட்சித் தலைவர்களால் இண்டியா கூட்டணி அறிவிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் இந்தக் கூட்டணி குறித்து தொடர்ந்து விமர்சித்து வரும் பிரதமர் மோடி, இண்டியா கூட்டணி ஊழலை ஊக்குவிப்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது மாறாக நாட்டுக்கு சேவை செய்வதற்காக இல்லை என்றும், இந்த கூட்டணி சொந்த ஆதாயங்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது; குடும்பமே பிரதானம், தேசநலன் தேவையில்லை என்பதே அவர்களின் நோக்கம் என்றும் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE