நீட் பயிற்சி மாணவர்கள் இருவர் தற்கொலை: கோட்டாவில் இந்த ஆண்டு இறந்த மாணவர்கள் எண்ணிக்கை 24 ஆக அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

கோட்டா: ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாணவர்கள் அவீஷ்கர் சாம்பாஜி கஸ்லே மற்றும் ஆதர்ஷ் ராஜ் தற்கொலை செய்து கொண்டனர். இத்துடன் இந்தாண்டு கோட்டாவில் நிகழ்ந்த மாணவர்களின் தற்கொலைகளின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது.

அவீஷ்கர் பயிற்சி மையத்தின் 6வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். மதியம் 3.15 மணிக்கு பயிற்சி மையத்தில் ஒரு தேர்வை எழுதிய பின்னர் அவீஷ்கர் மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார்.

உடனடியாக பயிற்சி மைய ஊழியர்கள் அந்த மாணவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே மாணவரின் உயிர் பிரிந்தது.

மகாராஷ்டிராவின் லட்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த அவீஷ்கர் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளாக அவர் நீட் இளநிலை மருத்துவ நுழைவுத் தேர்வுக்குப் பயிற்சி பெற்று வருகிறார். அவர் தனது தாய்வழி தாத்தா, பாட்டியுடன் வாடகை வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில் நேற்று மதியம் நீட் தேர்வு பயிற்சி எழுத வந்தவர் தேர்வு முடிந்து தற்கொலை செய்து கொண்டார்.

ஒரே நாளில் 2வது சம்பவம்: சில மணி நேரங்களுக்குப் பின்னர் பிஹாரைச் சேர்ந்த ஆதர்ஷ் ராஜ் என்ற மாணவரும் தற்கொலை செய்து கொண்டார். அவர் வாடகை வீட்டில் வசித்துவந்தார். அந்த வீட்டின் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரும் பயிற்சி மையத்தில் நேற்று மதியம் தேர்வெழுதித் திரும்பியுள்ளார். மாலை 7 மணியளவில் அவர் தற்கொலை செய்து கொண்டார். ஆதர்ஷும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இரண்டு மாணவர்களும் தற்கொலைக் குறிப்பு ஏதும் எழுதிவைக்கவில்லை.

இந்த ஆண்டில் இதுவரை 24: கோட்டாவில் இந்த 2023 ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர். கோட்டா நகரில் உள்ள பல்வேறு பயிற்சி மையங்களிலும் 3 லட்சம் மாணவர்கள் நீட், ஐஐடி ஜெஇஇ உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கும் பயிற்சி பெற்று வருகின்றனர்.

மாவட்ட ஆட்சியர் ஓ.பி. புன்கார் நேற்று கோட்டா நகர பயிற்சி மையங்களுக்கு ஓர் உத்தரவு பிறப்பித்தார். அதில் அனைத்து பயிற்சி மையங்களும் அடுத்த இரண்டு மாதங்களுக்கு எவ்வித தேர்வும் நடத்தக் கூடாது என்று உத்தரவிட்டார். கூடவே பயிற்சி மையங்களின் தங்கும் விடுதிகளில் உள்ள மின்விசிறிகளில் ஸ்ப்ரிங் இயந்திரம் பொருத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அதேபோல் வாரத்தில் ஒரு நாளாவது எவ்வித வகுப்போ தேர்வோ இல்லாமல் மாணவர்களுக்கு முழு விடுப்பு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE