ஜெனரிக் மருந்தை மட்டும் பரிந்துரைக்கும் முடிவை நிறுத்திவைக்க உத்தரவு: தேசிய மருத்துவ ஆணையம் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: ஜெனரிக் மருந்துகளை மட்டும் பரிந்துரைக்கும் முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.

நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்களுக்கான நெறிசார் வழிகாட்டுதல்கள் மற்றும் விதிகளை, தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) வெளியிட்டுள்ளது. அதில், பொதுப் பெயர் அல்லது மூலப் பெயர் (ஜெனரிக்) கொண்ட மருந்துகளை மட்டுமே மருத்துவர்கள் பரிந்துரைக்க வேண்டும் என்பது முக்கிய விதியாக இருந்தது. அதை மீறுவோர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு பல்வேறு ஆட்சேபனைகள் எழுந்தன. மூலப்பெயர் கொண்ட மருந்துகளை பரிந்துரைப்பதில் தவறில்லை என்றாலும்,அதன் தரத்தை எவ்வாறு உறுதிசெய்ய முடியும். பிரபல மருந்து நிறுவனங்களின் உற்பத்தி தரத்துக்கு சிறிய அளவில் மருந்து உற்பத்தி செய்பவர்களால் ஈடு கொடுக்க முடியாது. சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் குணமடைவதில் காலதாமதம் ஏற்படவும், தரமற்ற மருந்துகளால் பக்க விளைவுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

நாட்டில் உற்பத்தியாகும் அனைத்து மருந்துகளின் தரத்தையும் உறுதிபடுத்துவதை ஒழுங்குமுறைப்படுத்திய பிறகே, இத்தகைய விதிகளை அமல்படுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் தரப்பிலும், மருத்துவ சங்கங்கள் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டன.

இந்நிலையில், தேசிய மருத்துவ ஆணையம், அரசிதழில் புதிய அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஏற்கெனவேவெளியிடப்பட்ட நெறிசார் வழிகாட்டுதல்கள் மற்றும் விதிகளின் அமலாக்கம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், மாநில மருத்துவக் கவுன்சில்களின் நெறிசார் விதிகள் அமலில் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மருத்துவக் கவுன்சில் விதிகளில் மூலப்பெயர் மருந்துகளைப் பரிந்துரைப்பது பிரதானமாக இல்லாவிட்டாலும், மருத்துவர்கள் சமூகஊடகங்களிலோ, அச்சு, இணையம், காட்சி ஊடகங்களிலோ சுய விளம்பரத்துக்காக தகவல்களை பகிரக் கூடாது என்பது முக்கியவிதியாக இருப்பது குறிப்பிடத் தக்கது.

நெறிசார் வழிகாட்டுதல், விதிகளின் அமலாக்கம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE