இந்தியாவில் மதுவிலக்கு அமலில் இருக்கும் சொற்ப மாநிலங்களில் ஒன்று குஜராத். அரை நூற்றாண்டுக்கும் மேலாக தொடர்ந்து மதுவிலக்கு அமலில் இருக்கும் இந்தியாவின் முன்னோடி மதுவிலக்கு மாநிலமும்கூட. சமீபத்தில் குஜராத் அரசு மது அருந்தினால் 10 ஆண்டுகள் சிறை, ரூ.1 லட்சம் அபராதம் என்று புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. ஆனால், உண்மையான கள நிலவரம் எப்படி இருக்கிறது? போன் செய்தால் போதும், அரை மணி நேரத்தில் முகவரி தேடி மது வரும் என்கிறார்கள் மதுப் பிரியர்கள்!
குஜராத்தில் 1949-ம் ஆண்டு முதல் மதுவிலக்கு சட்டம் அமலில் இருந்தாலும் குஜராத் தனி மாநிலமாக உருவான 1960-லிருந்து அங்கு மதுவிலக்கு சட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், குஜராத்தின் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மதுவின் புழக்கம் மிக அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள் அங்குள்ள மதுவுக்கு எதிரான செயல்பாட்டாளர்கள். தற்போதைய சட்டப்பேரவை தேர்தலையொட்டிய சோதனைகளில் மட்டும் அங்கு 10 லட்சம் லிட்டர் மது கைப்பற்றப்பட்டிருக்கிறது. இதன் மதிப்பு ரூ. 23 கோடி!
ஆரம்ப காலத்தில் குஜராத்தில் மதுவிலக்குச் சட்டம் கடுமையாக இருந்தது உண்மைதான். ஆனால், 2006-ம் ஆண்டு மோடி முதல்வராக இருந்தபோது முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் ‘Vibrant Gujarat' என்கிற திட்டத்தின் அடிப்படையில் மதுவிலக்குச் சட்டத்தில் சில சலுகைகள் கொண்டு வரப்பட்டன. அதன்படி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் குஜராத்தில் மது அருந்தத் தடை எதுவும் இல்லை. இதற்கு பின்புதான் குஜராத்தில் சட்டவிரோத மதுப் புழக்கம் அதிகரித்தது.
இப்போதும் குஜராத்துக்கு வெளியே இருந்து வருபவர்கள் தங்களது முகவரிச் சான்று அல்லது தங்கும் விடுதியின் மேலாளர் அளிக்கும் கடிதத்தின் அடிப்படையில் மது வாங்கிக் கொள்ளலாம். இதற்காக 52 இடங்களில் அரசு அனுமதி பெற்ற மதுவிற்பனை மையங்கள் இயங்குகின்றன. ஆனாலும்கூட ஒருவர் ஒரு வாரத்துக்கு ஒரு முழு பாட்டில் மது அல்லது 750 மி.லிட்டர் மது மட்டுமே வாங்கிக்கொள்ளலாம். பீர் என்றால் வாரத்துக்கு 10 பாட்டில்கள். அவ்வளவுதான்.
இப்போதும்கூட தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற பண்டிகைகளின்போது மது அருந்தக்கூடாது என்று தெருத்தெருவாக காவல்துறையினர் எச்சரிக்கை விடுக்கிறார்கள். ஆனால், மேற்கண்ட விதிமுறைகள் அனைத்தும் கண் துடைப்புக்காக இருக்கின்றன என்கிறார் குஜராத்தில் சட்டவிரோதமாக புழங்கும் மதுவுக்கு எதிராக கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வரும் மீனா படேல்.
மீனா படேல் சொல்லும் பல விஷயங்கள் சமீபத்தில் மது தொடர்பாக தமிழகத்தில் நடந்த சம்பவங்களை நினைவூட்டுகிறது. குஜராத்திலிருக்கும் சட்டவிரோத மதுவிற்பனை மையங்களை கும்பலாக பெண்களுடன் சென்று அடித்து நொறுக்குவதே மீனா படேலின் பாணி. “நாங்கள் ‘சக்கீஸ்’ என்கிற பெயரில் பெண்கள் குழுக்களை மாவட்டம் வாரியாக அமைத்திருக்கிறோம். மது அருந்தும் பழக்கம் சமீப காலமாக எங்கள் குடும்ப ஆண்களுக்கும் தொற்றிக்கொண்டது. இதனால் குஜராத்தில் சட்ட விரோத மதுவிற்பனை மிகப் பெரிய வணிகமாக உருவெடுத்துள்ளது. ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களிலிருந்து சட்டவிரோதமாக இங்கு கடத்தி வரப்படும் மது இரட்டை விலை வைத்து விற்பனை செய்யப்படுகிறது.
அதுதவிர, குஜராத்திலேயே எரிசாராயத்தையும் எசன்ஸையும் கலந்து மது உற்பத்தி செய்கிறார்கள். ஆரம்பத்தில் நாங்கள் இதுகுறித்து காவல் துறையினரிடம் புகார் அளித்துப் பார்த்தோம். ஆனால், நடவடிக்கை இல்லை. அதனால், சமீப காலமாக நாங்களே 20 முதல் 30 பேர் கொண்ட பெண்கள் குழுக்களை அமைத்து சட்ட விரோத மது விற்பனை மையங்களை அடித்து உடைத்துவருகிறோம். ஆனால், காவல்துறையினர் மது விற்பனையாளர்கள் மீது வழக்கு தொடராமல் எங்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்” என்கிறார்.
அதேசமயம் அரசு அங்கீகாரம் பெற்ற மது விற்பனை மையங்களும் இடைத்தரகர்களின் ஆதிக்கத்திலேயே இருக்கின்றன என்கிறார்கள் அகமதாபாத்திலிருக்கும் பத்திரிகையாளர்கள். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “அகமதாபாத்தில் சுமார் 11 நட்சத்திர விடுதிகளின் மதுக்கூடங்களில் மதுவின் விலை சுமார் 10 மடங்கு அதிகம். அதேசமயம் இங்கிருக்கும் அரசு அனுமதி பெற்ற மதுவிற்பனை நிலையங்களிலும் வெளிநாட்டினர், வெளி மாநிலத்தவர் நேரடியாக மதுவை வாங்க முடிவதில்லை. இடைத்தரகர்களை அணுகினால் இரண்டு மடங்கு அதிகமான விலையில் மதுவை வாங்க இயலும். மது விற்பனையாளர்கள் பெரும்பாலும் ‘டோர் டெலிவரி’ மட்டுமே செய்கிறார்கள். போன் செய்தால் போதும், அரை மணி நேரத்தில் இருக்கும் இடம் தேடி வந்து தந்துவிடுவார்கள்...” என்கிறார்கள்.
பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் தலைவரான அல்பேஷ் தாக்கூரின் தேர்தல் பிரச்சாரத்தின் முக்கிய அம்சமாக இருக்கிறது குஜராத்தில் நடக்கும் சட்டவிரோத மதுவிற்பனை. இதுகுறித்து அவர் ‘தி இந்து’விடம் கூறுகையில், “கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சூரத் அருகிலிருக்கும் வரேலி கிராமத்தில் சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்ட மதுவை அருந்தியதில் 15 பேர் உயிரிழந்தார்கள். கடந்த 2012-ம் ஆண்டு மட்டுமே மிக அதிகளவாக 143 பேர் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட மதுவை அருந்தி உயிரிழந்திருக்கிறார்கள். இங்கு ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 7.50 லட்சம் லிட்டர் எரிசாராயம் கைப்பற்றப்படுகிறது. இவையும் கூட பின்வழியாக கள்ள மது தயாரிப்பாளர்களுக்கு கைமாற்றப்படுகிறது. இந்தத் தேர்தலில் எனது பிரச்சாரத்தின் மையக் கருத்தே முழுமையான மதுவிலக்குதான்...” என்கிறார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago