2024 தேர்தலுக்கான பாஜகவின் கருவியாக ‘இஸ்ரோ’ - மஹூவா மொய்த்ரா குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் கருவியாக ‘இஸ்ரோ’ மாறி இருக்கிறது என்று திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி மஹூவா மொய்த்ரா குற்றம்சாட்டியுள்ளார்.

நிலவை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பிய விண்கலமான சந்திரயான்-3, கடந்த 23-ம் தேதி மாலை 6 மணி அளவில் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கி செயல்பட்டு வருகிறது. விண்கலத்தின் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கியதை அடுத்து, அப்போது தென்னாப்பிரிக்காவில் இருந்த பிரதமர் மோடி, காணொலி காட்சி வாயிலாக பெங்களூருவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு அறையுடன் இணைந்து, விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இதனையடுத்து, தனது வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று நாடு திரும்பிய அவர், நேராக பெங்களூருவுக்குச் சென்று விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அதோடு, சந்திரயான்-2 தரையிறங்கிய பகுதிக்கு திரயங்கா என்றும், சந்திரயான்-3 தரையிறங்கிய பகுதிக்கு சிவ சக்தி என்றும் பிரதமர் பெயரிட்டார். அதோடு, இனி ஆண்டுதோறும் ஆகஸ்ட் 23ம் தேதி தேசிய விண்வெளி தினமாக கடைப்பிடிக்கப்படும் என்றும் அறிவித்தார்.

நிலவில் உள்ள திரயங்கா, சிவசக்தி என பெயரிடப்பட்டிருப்பதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவரான ரஷித் ஆல்வி, "நிலவில் உள்ள பகுதிகளுக்குப் பெயர் வைக்கும் அதிகாரம் மோடிக்கு யார் கொடுத்தது? அவரது இந்தச் செயலைப் பார்த்து உலகம் சிரிக்கிறது. நிலவின் பகுதிகளுக்குப் பெயர் வைக்க நாம் ஒன்றும் அவற்றின் உரிமையாளர் கிடையாது" என அவர் தெரிவித்திருந்தார்.

அதேநேரத்தில், சந்திரயான்-1 விண்கலம் விழுந்த இடத்திதுக்கு 2008-ம் ஆண்டு ஜவஹர் முனை என பெயரிட்டது சரியா என பாஜக தரப்பில் கேள்வி எழுப்பப்படுகிறது. ரஷித் ஆல்விக்கு பதில் அளித்துள்ள பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெஷாத், "சிவசக்தி என பெயரிட்டால் காங்கிரஸ் எதிர்க்கிறது. ஆனால், ஜவஹர் என பெயரிட்டால் வரவேற்கிறது. அந்தக் கட்சியின் இந்திய எதிர்ப்பு, இந்து எதிர்ப்பு மனநிலையையே இது காட்டுகிறது" என விமர்சித்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி மஹூவா மொய்த்ரா, "தற்போது 2024 தேர்தலுக்கான பாஜகவின் கருவியாக இஸ்ரோ மாறி இருக்கிறது. தேர்தலுக்கு முன் தேசியவாத வெறியைத் தூண்டும் வகையில் ஒவ்வொரு பணியும் பயன்படுத்தப்படும். பல பத்தாண்டுகளாக வளர்ந்து வரும் இந்திய அறிவியல் ஆராய்ச்சியை, மோடியின் சாதனையாக பாஜக ஆதரவு பக்தர்கள் 24 மணி நேரமும் சமூக ஊடகங்களில் பிரச்சாரம் செய்வார்கள். இஸ்ரோவின் விண்கலம் நிலவில் தரையிறங்கியது முதல் முறை அல்ல. அதோடு, விண்கலத்தை தரையிறக்கியப் பணியை நரேந்திர மோடி செய்யவில்லை. சந்திரயான் வடிவமைக்கும் பணியை பாஜகவின் ஐடி பிரிவும் மேற்கொள்ளவில்லை" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE