உ.பி. பள்ளி ஆசிரியை மீது வழக்குப் பதிய தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில் பள்ளி மாணவர் ஒருவரை மத ரீதியாக விமர்சித்ததோடு, சக மாணவர்ளை ஏவி கன்னத்தில் அறையச் செய்த பள்ளி ஆசிரியை மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

முஸாபர்நகர் காவல் கண்காணிப்பாளருக்து (எஸ்எஸ்பி) இவ்வாறு உத்தரவிட்டுள்ள தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், ஒரு வார காலத்துக்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இதேபோல, இச்சம்பவம் தொடர்பாக, ஆர்இடி சட்டம் 2019, பிரிவு 17-ன் (குழந்தைகளை உடல் ரீதியாக தண்டித்தல் / மனரீதியாக துன்புறுத்துதல்) கீழ் நடவடிக்கை எடுக்க முஸாபர்நகர் மாவட்ட நீதிபதியை வலியுறுத்தியுள்ளது.

நடந்தது என்ன? - உத்தரப் பிரதேச மாநிலம் முஸாபர்நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளி ஆசிரியை மாணவர் ஒருவருக்கு தண்டனை கொடுக்கும் விதமாக சக வகுப்புத் தோழர்களை ஏவி அடிக்கச் செய்த வீடியோ ஒன்று இணைத்தில் வைரலானது. அந்த வீடியோவில் த்ரபதி தியாகி என்ற ஆசிரியர் 2-ஆம் வகுப்பு சிறுவனிடம் வாய்ப்பாடு சொல்லும்படி சொல்கிறார். அந்தச் சிறுவனால் அதனை சரியாகச் சொல்ல முடியவில்லை. உடனே சக மாணவர்களை எழுப்பி அந்தச் சிறுவனை கன்னத்தில் அறையச் சொல்கிறார். அந்தச் சிறுவன் அழும்போது ஒரு குறிப்பிட்ட மதத்தினை (முஸ்லிம்) சுட்டிக்காட்டி, அந்த மதத்தைச் சேர்ந்த பெண்கள் தங்கள் குழந்தைகளின் கல்வியில் அக்கறை செலுத்ததால்தான் இதுபோன்ற அந்தச் சமூக சிறார்கள் கல்வியில் பின்தங்கி இருப்பதாகக் கூறி, அந்தச் சிறுவனை இன்னும் பலமாகத் தாக்கும்படி கூறுகிறார்.

தற்போது இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, இச்சம்பவம் தொடர்பாக கண்டனம் தெரிவித்திருந்த காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில், "அப்பாவிக் குழந்தைகளின் மனதில் பிரிவினைவாதம் என்ற விஷத்தை விதைப்பது, அதுவும் பள்ளி எனும் புனிதமான இடத்தை வெறுப்பை வர்த்தகம் செய்யும் சந்தையாக மாற்றுவது என்பது ஓர் ஆசிரியர் செய்யக் கூடாத உச்சபட்ச இழி செயலாகும். இது பாஜக ஊற்றிய அதே மண்ணெண்ணெய்தான். இதைக் கொண்டுதான் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் பாஜக வெறுப்பைப் பரப்பியுள்ளது. குழந்தைகள்தான் இந்தியாவின் எதிர்காலம். அவர்களை வெறுக்காதீர்கள். நாம் அவர்களுக்கு அன்பை போதிக்க வேண்டும் " என்று குறிப்பிட்டிருந்தார்.

வெறுப்பு அரசியலின் விளைவு: இச்சம்பவத்தைக் கண்டித்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "உத்தரப் பிரதேசத்தில் பள்ளி ஆசிரியை ஒருவர், மத பாகுபாட்டின் அடிப்படையில் பள்ளி மாணவனுக்கு தண்டனை வழங்கி சக மாணவர்களை தூண்டிய சம்பவம் பாஜக - ஆர்எஸ்எஸ் வெறுப்பு அரசியலின் விளைவாகும். இதுபோன்ற சம்பவங்கள் நமது உலக புகழுக்கு இழுக்காகும். இது அரசியலமைப்புக்கு எதிரானது. இந்தச் சம்பவத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்கப்பட வேண்டும். அப்போது தான் இனி யாரும் இதுபோன்ற விஷத்தினை சமூகத்தில் கலப்பதற்கு முன்பாக நூறு முறை யோசனை செய்வர்" என்று தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், "அந்த ஆசிரியையை உடனடியாக பணிநீக்கம் செய்யவேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக எம்.பி வருண் காந்தி "இது எங்களை வெட்கி தலைகுனிய வைத்துள்ளது" என்று தெரிவித்துள்ளார். அதேபோல, சம்பவத்தினைக் கண்டித்துள்ள உத்தரப் பிரதேச எம்.பி. ஜெய்வீர் சிங், "எதிர்க்கட்சிகள் இதனை அரசியலாக்குகின்றன" என்று கூறியுள்ளார்.

தண்டனையில் மதவாதம் இல்லை: இதுகுறித்து பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவின் தலைவர் அமித் மாள்வியா தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "முஸாபர்நகரில் உள்ள பள்ளியின் ஆசிரியை ஒருவர், வாய்ப்பாட படிக்காத, வீட்டுப்பாடம் செய்யாத மாணவர் ஒருவருக்கு தண்டனை கொடுக்கும் விதமாக அம்மாணவரை அடிக்கும் படி சக மாணவரிடம் சொல்லியிருக்கிறார். ஏன் அந்த ஆசிரியர் அவரே எழுந்து சென்று அடிக்காமல், பிற மாணவர்களை அடிக்கச் சொல்லியிருக்கிறார்? ஊடகங்களால் இதை உறுதிப்படுத்த முடியும்.

ஒரு மாணவரை சக மாணவர்களை வைத்து அடிக்கச் செய்வது என்பது மோசமான சிந்தனைதான் என்றாலும், எல்லாவற்றையும் சந்தேகத்தோடு பார்ப்பவர்கள் கூறுவது போல் இதில் வகுப்புவாத சிந்தனை எதுவும் இல்லை. அவர்களின் அக்கறை மாணவரின் நலனை விட அவரது மத அடையாளத்தின் மீத இருக்கிறது என்பதை இது காட்டுகிறது. மாணவனைக் காப்பாற்ற முயலாமல், அவர்களின் வெறுப்புக் கொள்கையை பரப்பப யன்படுத்துவதற்காக வெட்கப்படுகிறேன். இங்கே போலீஸார் சொல்வதைக் கேளுங்கள்" என்று கூறி போலீஸார் பேசும் வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE