‘திரயங்கா’, ‘சிவ சக்தி’ என பெயரிட்டதில் மகிழ்ச்சி: இஸ்ரோ தலைவர் சோமநாத்

By செய்திப்பிரிவு

பெங்களூரு: நிலவில் சந்திரயான்-2, சந்திரயான்-3 தரையிறங்கிய இடங்களுக்கு திரயங்கா, சிவ சக்தி என பெயரிட்டது மகிழ்ச்சி அளிப்பதாக இஸ்ரோ தலைவர் சோமநாத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியது: "மதிப்புக்குரிய பிரதமர் நரேந்திர மோடி, எங்கள் ஒவ்வொருவரையும் பாராட்டுவதற்காக இன்று எங்கள் கட்டுப்பாட்டு மையத்துக்கு வருகை தந்தார். அவருடைய அருமையான பேச்சைக் கேட்டோம். அவர் எங்களைப் பாராட்டினார். சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் நிலவில் தரையிறங்கிய வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றி காரணமாக பிரதமர் மோடி மிகுந்த உணர்ச்சிப்பூர்வமாக இருந்தார்.

சந்திரயான்-2 தரையிறங்கிய இடத்திற்கு திரயங்கா என்றும், சந்திரயான்-3 தரையிறங்கிய இடத்திற்கு சிவ சக்தி என்றும் அவர் பெயரிட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. அதுமட்டுமல்ல, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் துறைகளில் நமது நாடு சக்தி பெறும் வகையில், நாட்டின் இளம் தலைமுறையினருக்காக மேற்கொள்ளப்பட உள்ள திட்டங்கள் குறித்தும் அவர் விளக்கினார். பிரதமருக்கு நாங்கள் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்" என்று சோமநாத் தெரிவித்தார்.

பிரதமரின் வருகை தொடர்பாக இஸ்ரோவின் ட்விட்டர் பக்கத்தில், இஸ்ரோவும், இந்திய அறிவியல் சமூகமும் உங்கள் பாராட்டுக்கும், உறுதியான ஆதரவுக்கும், ஊக்கத்துக்கும் நன்றி தெரிவிக்கின்றன. நமது நாட்டுக்காகவும், மனித குலத்துக்காகவும் சிறந்த சாதனைகளை படைப்பதற்கான உறுதியை வளர்ப்பதில் உங்கள் உரை ஆழமான ஊக்கத்தை அளித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பெங்களூருவின் இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்துக்கு வந்த பிரதமர் மோடி, சந்திரயான்-3 வெற்றிக்காக விஞ்ஞானிகளுக்கு நேரில் பாராட்டு தெரிவித்தார். அப்போது, சந்திரயான்-2 தரையிறங்கிய இடத்துக்கு திரயங்கா என்றும், சந்திரயான்-3 தரையிறங்கிய இடத்துக்கு சிவ சக்தி என்றும் அவர் பெயரிட்டார். மேலும், சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கிய ஆகஸ்ட் 23-ம் தேதி இனி தேசிய விண்வெளி தினமாக கடைப்பிடிக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE