மதுரை ரயில் விபத்து | சிசிடிவி ஆய்வின்படி, லக்னோவில் புறப்பட்டபோது ரயிலில் சிலிண்டர் இல்லை: உ.பி. அதிகாரி

By செய்திப்பிரிவு

லக்னோ: மதுரையில் நின்றிருந்த சுற்றுலா ரயிலில் தீப்பற்றி விபத்துக்குள்ளான நிலையில், அதில் சமையல் எரிவாயு சிலிண்டர் எப்படிக் கொண்டு வரப்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக உத்தரப் பிரதேசத்தின் லக்னோ ரயில்வே பாதுகாப்புப் படையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

லக்னோ பிரிவு ரயில்வே பாதுகாப்புப் படையின் மூத்த அதிகாரி ஒருவர் அளித்த பேட்டியில், "லக்னோ சந்திப்பில் இருந்து ஆகஸ்ட் 17 அன்று சம்பந்தப்பட்ட பெட்டி புறப்பட்டபோது அதில் சிலிண்டர் போன்ற தீப்பற்றக் கூடிய பொருட்கள் இருக்கவில்லை. 63 பயணிகள் அந்தப் பெட்டியில் இருந்தனர். எங்களது குழுவினர் எப்போதுமே ரயிலில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகிறதா என்பதை தீவிரமாகக் கண்காணிப்பார்கள். அப்படி ஏதும் இருந்திருந்தால் நிச்சயம் கைப்பற்றப்பட்டிருக்கும்.

இந்நிலையில், ரயிலில் சிலிண்டரில் இருந்து பரவிய தீ பிடித்தே விபத்து நடந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இதனை ஒட்டி நாங்கள் ஆகஸ்ட் 17-ஆம் தேதி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தோம். அதில் சம்பந்தப்பட்ட குழுவினர் சிலிண்டர் எடுத்துச் சென்றதற்கான சாட்சி ஏதுமில்லை. அப்படியிருக்க, அந்த சிலிண்டர் எப்படி ரயிலில் எடுத்துச் செல்லப்பட்டது என்பது குறித்து விசாரித்து வருகிறோம்" என்றார்.

விபத்து நடந்தது எப்படி? - கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து ஆன்மிகப் பயணமாக 60-க்கும் மேற்பட்டோர் அடங்கிய குழுவினர் தமிழகம் வந்தனர். இவர்கள் ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு புனிதத் தலங்களுக்கும் சென்றுள்ளனர். கடைசியாக நேற்று நாகர்கோவிலில் உள்ள பத்மநாபசுவாமி கோயிலில் தரிசனம் செய்துவிட்டு இன்று அதிகாலை 3.45 மணியளவில் மதுரை வந்துள்ளனர். புனலூரில் இருந்துவந்த ரயில் மூலம் அவர்கள் மதுரை வந்தனர். அவர்கள் வந்த இரண்டு ரயில் பெட்டிகள் தனியாகப் பிரிக்கப்பட்ட மதுரை ரயில்வே சந்திப்பில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. கனெக்டிங் ரயில் மூலமாக நாளை சென்னை செல்லவிருந்தனர்.

10 பேர் உயிரிழப்பு: இன்று அதிகாலை 5.15 மணியளவில் ரயிலில் தீப்பிடித்துள்ளது. ரயிலில் இருந்த பயணிகள் சிலிண்டர் பயன்படுத்தி சமைத்துள்ளனர். அப்போது சிலிண்டர் வெடித்து தீ பிடித்துள்ளது. தீ மளமளவெனப் பரவ ரயில் பயணிகள் அலறியடித்துக் கொண்டு வெளியேறியுள்ளனர். 55 பேர் உயிர் தப்பியுள்ளனர். சமையல் செய்வதற்காக ரயில் பெட்டியின் ஒருபுறம் உள்ள கதவில் உள்புறம் தாழிடப்பட்டிருந்த நிலையில் பயணிகள் அனைவரும் ஒரே பக்கத்தில் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் தீயில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர்.

ரயிலில் பயணிகள் சட்டவிரோதமாக சமையல் எரிவாயு சிலிண்டரை கொண்டு சென்றதே விபத்துக்குக் காரணம் என்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

குடியரசுத் தலைவர், உள்துறை அமைச்சர் இரங்கல்: மதுரை ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மதுரை சுற்றுலா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE