காவிரி நதி நீர் பங்கீடு வழக்கில் பதில் அளிக்க காவிரி ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

By இரா.வினோத்


புதுடெல்லி: காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக தமிழக அரசு தொடுத்த வழக்கில், காவிரி மேலாண்மை ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இறுதி தீர்ப்பின்படி கர்நாடக அரசு தமிழகத்துக்கு உரிய நீரை வழங்கவில்லை. இதனால் தமிழக அரசு, கடந்த வாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில், ‘‘ஆகஸ்ட் மாதத்தில் வழங்க வேண்டிய 37.9 டிஎம்சி நீரை உடனடியாக திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும். குறுவை சாகுபடிக்காக தினமும் 24,000 கன அடி நீர் திறந்துவிட வேண்டும். இவ்வழக்கை அவசர வழக்காக கருதி உடனடியாக விசாரிக்க வேண்டும்'' என்று கோரியது.

மேலும் த‌மிழக அரசு தரப்பில் இவ்வழக்கை விசாரிக்க தனி அமர்வை அமைக்க வேண்டும் என தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் முன்னிலையில் கோரிக்கை வைத்தது. இதையடுத்து நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.எஸ்.நரசிம்மா, பி.கே.மிஸ்ரா அடங்கிய புதிய அமர்வு அமைக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழக அரசின் வழக்கு நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்குவந்தது. அப்போது தமிழக அரசின் தரப்பில்," காவிரி நதி நீர் பங்கீட்டில் கர்நாடக அரசு உச்ச நீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகியவற்றின் உத்தரவை முறையாக பின்பற்றுவதில்லை. காவிரிநீர் திறந்து விடப்ப‌டாததால் தமிழகத்தின் குறுவை சாகுபடிக்கு நீர்திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக தினசரி 24 ஆயிரம் கன அடி காவிரி நீரை திறக்க க‌ர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும்'' என வலியுறுத்தப்பட்டது.

அதற்கு கர்நாடக அரசின் தரப்பில், ``நடப்பாண்டில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய அளவுக்கு மழை பெய்யவில்லை. இதனால் கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய பிரதான அணைகள் நிரம்பவில்லை. எனவே, இந்த ஆண்டை வறட்சிஆண்டாக கணக்கிட்டு, அதற்கேற்றவாறு நீர் பங்கீடு சூத்திரம் வகுக்கவேண்டும். கர்நாடகாவில் கள நிலவரத்தை அறிந்து கொள்ளாமல் தமிழக அரசு தவறான புரிதலோடுஇந்த மனுவை தாக்கல் செய்துள்ளது'' என வாதிடப்பட்டது.

அதற்கு நீதிபதி பி.ஆர்.கவாய், ‘‘கர்நாடகாவில் மழைப்பொழிவு நிலவரம், அணைகளின் நீர் இருப்பு குறித்து காவிரி மேலாண்மை ஆணையம் அறிக்கை அளிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் ஆணையத்தின் அறிக்கையின்படி முடிவெடுப்பதே உகந்தது. அதனை பரிசீலிக்காமல் உடனடியாக உத்தரவு பிறப்பிப்பது சிரமம் ஆகும்.எனவே இவ்வழக்கில் காவிரி மேலாண்மை ஆணையம் பதிலளிக்க வேண்டும்''என்றார்.

அதற்கு காவிரி மேலாண்மை ஆணையத்தின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பதி, ''ஆணையத்தின் அடுத்தக் கூட்டம் வரும் திங்கள்கிழமை நடைபெறுகிறது. அதில் கர்நாடக அணைகளில் உள்ள நீர் மட்டம், மழைப் பொழிவு, தமிழகத்துக்கு திறக்கப்பட்ட நீரின் அளவு உள்ளிட்ட‌ விவரங்கள் திரட்ட‌ப்படும். அந்த புள்ளி விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தயாராக இருக்கிறோம்''என்றார்.

இதையடுத்து நீதிபதி பி.ஆர்.கவாய், ‘‘காவிரி மேலாண்மை ஆணையத்தின் அடுத்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு, அணைகளின் நீர்மட்டம் உள்ளிட்ட விவரங்களை பிரமாண பத்திரமாக ஆணையம் தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும்''என உத்தரவிட்டார். இதையடுத்து வழக்கு வரும் செப். 1-க்கு தள்ளி வைக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

17 mins ago

இந்தியா

19 secs ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

மேலும்