கேரள மாநிலம் வயநாட்டில் பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து 9 பெண்கள் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

வயநாடு: கேரளாவின் வயநாடு பகுதியில் ஜீப் ஒன்று பள்ளத்தில் விழுந்ததில் தோட்ட வேலை செய்யும் 9 பெண்கள் உயிரிழந்தனர். 5 பேர் காயம் அடைந்தனர்.

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள கம்பமாலா என்ற இடத்தில் தேயிலை தோட்டம் உள்ளது. இங்கு பணியாற்றிய பெண் தொழிலாளர்கள் 13 பேர் தங்கள் வேலையை முடித்து விட்டு நேற்று மாலை, தேயிலை நிறுவனத்தின் ஜீப்பில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

மாநந்தவாடி பகுதியில் உள்ள கண்ணமாலா என்ற இடத்தில் ஜீப் வந்து கொண்டிருந்தபோது, அங்கிருந்து கொண்டை ஊசி வளைவில் திரும்பியது. அப்போது பாலத்தில் மோதிய ஜீப் கட்டுப்பாட்டை இழந்து 25 மீட்டர் பள்ளத்தில் விழுந்தது. பள்ளத்தில் இருந்த பாறைகள் மீது ஜீப் உருண்டதால் அது இரண்டாக உடைந்து நொறுங்கியது. இதில் 9 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஜீப் டிரைவர் மணி உட்பட 5 பேர் காயம் அடைந்தனர்.

இறந்தவர்கள் அனைவரும் தாளபுழா அருகேயுள்ள மக்கிமாலா பகுதியைச் சேர்ந்தவர்கள். காயம்அடைந்தவர்கள் வயநாட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

முதல்வர் உத்தரவு: விபத்தில் சிக்கியவர்களுக்கு தேவையான உதவிகளை அளிக்க மாநில முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். மேலும், கேரள வனத்துறை அமைச்சர் ஏ.கே.சசிதரன் நேரடியாக சம்பவ இடத்துக்கு சென்று வேண்டிய உதவிகளை செய்து தரவும் முதல்வர்பினராயி விஜயன் உத்தர விட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE