ஸ்மார்ட் சிட்டி போட்டியில் இந்தூர் நகரம் முதலிடம்: 2, 3-வது இடங்களை பிடித்த சூரத், ஆக்ரா

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தேசிய ஸ்மார்ட் சிட்டிக்கான விருதுகள் போட்டியில் இந்தூர் நகரம் முதலிடம் பிடித்துள்ளது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை நாடு முழுவதும் மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது. இந்த நகரங்களில் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள், நவீன வசதிகள், வைஃபை, இன்டர்நெட் இணைப்பு போன்ற இணைய வசதிகள், நவீன சுகாதார வசதிகள் உள்ளிட்டவற்றை மத்திய அரசு அமைத்து வருகிறது.

மேலும், இந்தத் திட்டத்தின் கீழ்மேம்படுத்தப்பட்ட நகரங்களிடையே போட்டியையும் மத்திய அரசு ஏற்படுத்தி வருகிறது. 4-வதுஆண்டாக நடைபெற்ற இப்போட்டியில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த இந்தூர் நகரம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கரோனா காரணமாக 2021-ம் ஆண்டு இந்த போட்டிநடத்தப்படவில்லை. தற்போது நடத்தப்பட்ட போட்டி 2022-ம் ஆண்டுக்கானது ஆகும்.இந்த போட்டியில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தசூரத் 2-வது இடத்தையும், உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆக்ரா 3-ம் இடம் பிடித்துள்ளது.

விருது பெற்ற நகரங்களுக்கு இந்தியா ஸ்மார்ட் நகரம் போட்டி விருதுகளை (ஐஎஸ்ஏசி) குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு செப்டம்பர் 27-ம் தேதி இந்தூரில் நடைபெறும் விழாவில் வழங்கஉள்ளார்.

தமிழ்நாடு 2-ம் இடம்: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த வரிசையில் முதலிடத்தை மத்தியபிரதேசம் பெற்றுள்ளது. 3-வது இடத்தை ராஜஸ்தான், உத்தரபிரதேச மாநிலங்கள் கூட்டாகப் பிடித்துள்ளன. யூனியன் பிரதேசங்கள் பட்டியலில் சண்டிகர் முதலிடத்தைப் பெற்றுள்ளது. இந்தப் போட்டியை மத்திய அரசு 2015-ம் ஆண்டு தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE