நேரடியாகவோ, மறைமுகமாகவோ சூதாட்ட விளம்பரங்கள் கூடாது: மத்திய அரசு எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: சூதாட்டம் குறித்த நேரடி மற்றும் மறைமுக விளம்பரங்களை அனுமதிக்க வேண்டாம் என்று ஊடக நிறுவனங்களுக்கு தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இதைக் கடைபிடிக்கத் தவறினால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஊடக நிறுவனங்கள், ஆன்லைன் விளம்பர இடைத்தரகர்கள் மற்றும் சமூக ஊடகத் தளங்கள் உள்ளிட்ட அனைத்து சம்பந்தப்பட்ட பிரிவினர்களையும், எந்தவொரு வடிவத்திலும் பந்தயம், சூதாட்டம் குறித்த விளம்பரங்கள், விளம்பர உள்ளடக்கத்தைக் காட்டுவதைத் தவிர்க்குமாறு தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் இன்று அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிவுரையைக் கடைப்பிடிக்கத் தவறினால், பல்வேறு சட்டங்களின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூதாட்ட, பந்தய தளங்களின் விளம்பரங்கள் நுகர்வோருக்கு, குறிப்பாக இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு, நிதி மற்றும் சமூகப் பொருளாதார ஆபத்தை ஏற்படுத்துகின்றன. சூதாட்டப் பயன்பாடுகளின் பயனர்களிடமிருந்து கணிசமான பணத்தை வசூலித்த முகவர்களின் நெட்வொர்க்குக்கு எதிராக சமீபத்தில் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இந்தப் பொறிமுறை பணமோசடி நெட்வொர்க்குகளுடன் தொடர்புகளைக் கொண்டுள்ளது. இதனால் நாட்டின் நிதி பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளது.

இந்த சட்டவிரோத நடவடிக்கைகளுடன், இதுபோன்ற விளம்பரங்களுக்கு பணம் செலுத்த கருப்புப் பணம் பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்பும் அதிகம். அந்த வகையில், கிரிக்கெட் போட்டிகள் உள்ளிட்ட முக்கிய விளையாட்டு நிகழ்வுகளின்போது சூதாட்டம் மற்றும் சூதாட்டத் தளங்களின் நேரடி மற்றும் மறைமுக விளம்பரங்களை விளம்பர இடைத்தரகர்கள் மற்றும் சமூக ஊடகத் தளங்கள் உள்ளிட்ட சில ஊடக நிறுவனங்கள் அனுமதித்து வருகின்றன. மேலும், குறிப்பாக கிரிக்கெட் போன்ற ஒரு பெரிய விளையாட்டு நிகழ்வின் போது இதுபோன்ற பந்தயம் மற்றும் சூதாட்ட தளங்களை ஊக்குவிக்கும் போக்கு இருக்கிறது. அத்தகைய ஒரு முக்கியமான சர்வதேச நிகழ்வு இன்னும் சில நாட்களில் தொடங்குகிறது.

பந்தயம், சூதாட்டத் தளங்களை விளம்பரப்படுத்துவதற்கு எதிராக ஊடக தளங்களை எச்சரிக்க அமைச்சகம் ஆலோசனைகளை வழங்கியுள்ளது. ஆன்லைன் விளம்பர இடைத்தரகர்கள் இந்திய பார்வையாளர்களைக் குறிவைத்து இதுபோன்ற விளம்பரங்களை வெளியிட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக 13.06.2022, 03.10.2022 மற்றும் 06.04.2023 ஆகிய நாட்களில் அமைச்சகத்தால் ஆலோசனைகள் வெளியிடப்பட்டுள்ளன. சூதாட்டம் மற்றும் பந்தயம் ஒரு சட்டவிரோத நடவடிக்கை. எனவே எந்தவொரு ஊடகத் தளத்திலும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அத்தகைய நடவடிக்கைகளை விளம்பரப்படுத்துவது மற்றும் ஊக்குவித்தல் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019, பிரஸ் கவுன்சில் சட்டம் 1978 உள்ளிட்ட பல்வேறு சட்டங்களுக்கு முரணானது.

மேலும், தகவல் தொழில்நுட்ப (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறைகள் குறியீடு) விதிகள், 2021 இன் சமீபத்தில் திருத்தப்பட்ட விதி 3 (1) (பி), இடைத்தரகர்கள் தாங்களாகவே நியாயமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் அதன் கணினி வளத்தைப் பயன்படுத்துபவர்கள், விளையாட்டு பற்றிய எந்தவொரு தகவலையும் வழங்கவோ, அதனை தூண்டும் வகையில் காட்சிப்படுத்தவோ, பதிவேற்றவோ, திருத்தவோ, வெளியிடவோ, அனுப்பவோ, சேமிக்கவோ, புதுப்பிக்கவோ அல்லது பகிரவோ கூடாது என்று கூறுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE