“பிரதமரின் கூற்று பொய்...” - சீன ஆக்கிரமிப்பு குறித்து லடாக்கில் பேசிய ராகுல் காந்தி

By செய்திப்பிரிவு

லடாக்: லடாக்கில் ஒரு அங்குலம் நிலம் கூட சீனா ஆக்கிரமிக்கவில்லை என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பொய் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் இடையே, சீன அதிபரும் இந்திய பிரதமரும் எல்லைப் பிரச்சினை தொடர்பாக நேற்று பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

லாடக் சென்றுள்ள ராகுல் காந்தி அங்குள்ள கார்கில் போர் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அந்தப் பகுதியில் நடந்த பேரணியில் அவர் கொண்டார். அப்போது ராகுல் காந்தி பேசியதாவது: "சில மாதங்களுக்கு முன்பு நாங்கள் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டோம். அது இந்திய ஒற்றுமை யாத்திரை என்று அழைக்கப்பட்டது. அதன் நோக்கம் நாட்டில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் பரப்பி வரும் வெறுப்பு மற்றும் வன்முறைகளுக்கு எதிராக நிற்பது. அந்த யாத்திரை வெளிப்படுத்திய செய்தி வெறுப்பின் சந்தையில் அன்பின் கடையைத் திறக்க புறப்பட்டுள்ளோம் என்பதே. கடந்த சில நாட்களாக அதை நானே என்னுள் பார்க்கிறேன். இந்திய ஒற்றுமை யாத்திரையின் போது குளிர்கால பனியின் காரணமாக லடாக்கிற்கு வர முடியவில்லை. இங்கு ஒரு யாத்திரை நடத்த வேண்டும் என்று என்மனதில் இருந்தது. இந்த முறை மோட்டார் சைக்கிளில் சென்று அதனை நிறைவேற்றினேன்.

லடாக் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பகுதி. இங்கு ஒரு விஷயம் தெளிவாக தெரிகிறது. சீனா இந்தியாவின் நிலத்தை ஆக்கிரமித்துள்ளது. எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் சீனா இந்தியாவின் நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை என்று பிரதமர் சொன்னது வருத்தமளிக்கிறது. அது பொய். மற்றத் தலைவர்கள் அவர்களின் மனதின் குரலை பேசுவதில் மும்முரமாக உள்ளார்கள். நான் உங்கள் மனதின் குரலைக் கேட்க விரும்பினேன். அதில் ஒரு விஷயம் மிகத்தெளிவாக தெரிகிறது. காந்தி மற்றும் காங்கிரஸின் சிந்தாந்தங்கள் லடாக்கின் ரத்ததிலும் மரபணுவிலும் கலந்துள்ளது" இவ்வாறு ராகுல் பேசினார்.

முன்னதாக, தென்னாப்பிரிக்காவில் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட இந்திய பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜிங்பிங்கும் மாநாட்டின் இடையே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து தெரிவித்த இந்திய வெளியுறவு செயலாளர் வினய் க்வத்ரா, "கிழக்கு லடாக்கில் உள்ள எல்லைக்கட்டுப்பட்டு கோடு குறித்து இந்தியா சீனாவுக்கு இடையில் இருக்கும் தீர்க்கப்படாத பிரச்சினைகள் குறித்து ஜிங்பிங்கிடம் மோடி தனது கவலையை தெரிவித்தார். மேலும், இந்தியா சீனா இடையேயான உறவு சுமூகமாக இருப்பதற்கு எல்லைப்பகுதிகளில் அமைதியும் நிலவுவது அவசியம் என்றும் வலியுறுத்தினார்" என்று குறிப்பிட்டார்.

ராகுல் காந்தி ஆக.17ம் தேதி லடாக் சென்றடைந்தார். கடந்த 2019ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஜம்மு காஷ்மீரும் லடாக்கும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்ட பின்னர் ராகுல் காந்தி முதல் முறையாக அங்கு சென்றிருக்கிறார். இதனைத் தொடர்ந்து இரண்டு நாள் சொந்தப் பயணமாக ராகுல் காந்தி ஸ்ரீநகர் செல்கிறார். "ராகுல் காந்தி சனிக்கிழமை ஸ்ரீநகர் செல்கிறார். அங்கு அவருடன் சோனியா காந்தியும் இணைந்து கொள்கிறார். அப்போது அவர்கள் எந்த அரசியல் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளப் போவதில்லை. எந்த அரசியல் தலைவர்களையும் சந்திக்கப் போவதில்லை" என்று ஜம்மு காஷ்மீர் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் விகர் ரசூல் வானி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE