அஜித் பவார் எங்கள் தலைவர்; கட்சி பிளவுபடவில்லை: சரத் பவார்

By செய்திப்பிரிவு

மும்பை: அஜித் பவார் தங்கள் கட்சியின் தலைவர்தான் என்றும் அதில் எந்த முரண்பாடும் இல்லை என்றும், தங்கள் கட்சியில் பிளவு ஏற்படவில்லை என்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவின் பாரமதியில் செய்தியாளர்களிடம் பேசிய சரத் பவார், "அவர் (அஜித் பவார்) எங்கள் தலைவர் என்பதில் எந்த முரண்பாடும் இல்லை; என்சிபியில் பிளவும் இல்லை. ஒரு கட்சியில் பிளவு எவ்வாறு நிகழ்கிறது? கட்சியில் இருந்து தேசிய அளவில் ஒரு பெரிய குழு பிரிந்தால்தான் கட்சி பிளவுபட்டுவிட்டது என்று அர்த்தம். ஆனால், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இன்று அப்படியொரு நிலை இல்லை. எங்கள் கட்சியின் சில தலைவர்கள் வித்தியாசமான நிலைப்பாட்டை எடுத்தனர். ஆனால் இதை ஒரு பிளவு என்று சொல்ல முடியாது. ஜனநாயகத்தில் அவர்களால் அவ்வாறு செய்ய முடியும்" என்று தெரிவித்துள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் சரத் பவாரின் அண்ணன் மகனுமான அஜித் பவார், பாஜகவோடு கூட்டணி அமைத்து அம்மாநில துணை முதல்வராக பதவியேற்றார். அவரோடு, அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இதையடுத்து, கட்சியின் பெயர் மற்றும் சின்னத்திற்கு இருதரப்பும் உரிமை கோரின. எனினும், இந்த சம்பவங்களை அடுத்து சரத் பவாரை, அஜித் பவார் நேரில் சந்தித்துப் பேசினார். பின்னர், ஆதரவு எம்எல்ஏக்களோடு சென்று மீண்டும் சந்தித்தார். அப்போது, கட்சி பிளவுபட்டுவிடக்கூடாது என்று சரத் பவாரிடம் வலியுறுத்தியதாக அஜித் பவார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், சரத் பவார் தங்கள் தலைவர் என்றும் அஜித் பவார் தரப்பில் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வந்தது.

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், சிவ சேனா(உத்தவ் பாலாசாஹேப் தாக்கரே) ஆகிய கட்சிகள் தனி கூட்டணி அமைத்து செயல்பட்டு வந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் தற்போது எந்த அணியில் இருக்கிறது என்ற கேள்வியை மற்ற இரு கட்சிகளும் எழுப்பின. அப்போது, தங்கள் கூட்டணி உறுதியாக இருப்பதாக சரத் பவார் தெரிவித்தார். மேலும், இம்மாத இறுதியில் மும்பையில் கூட உள்ள இண்டியா கூட்டணியின் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்த தேசியவாத காங்கிரஸ் உறுதியாக இருப்பதாகவும் சரத் பவார் தெரிவித்தார். எனினும், அந்த கட்சி காங்கிரஸ் கூட்டணியில் இருக்கிறதா அல்லது பாஜக கூட்டணியில் இருக்கிறதா என்ற கேள்வி தொடர்ந்து நீடித்து வந்தது. இந்நிலையில், சரத் பவாரின் இந்த அறிவிப்பு அஜித் பவார், பாஜக கூட்டணிக்குச் சென்றதை அவர் ஏற்றுக்கொண்டுவிட்டார் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE