சத்தீஸ்கரில் விருப்ப ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாஜகவில் இணைந்தார்: சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட திட்டம்

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: சத்தீஸ்கரில் விருப்ப ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி நீல்கந்த் டெக்காம் (55) பாஜகவில் இணைந்துள்ளார். வரவிருக்கும் சத்தீஸ்கர் தேர்தலில் அவர் போட்டியிட திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

சத்தீஸ்கரில் அதிகாரியாக பணியாற்றி வந்த நீல்கந்த் டெக்காம் கடந்த 2008-ல் ஐஏஎஸ் அந்தஸ்து பெற்றார். இதையடுத்து சத்தீஸ்கரின் கொண்டாகாவ்ன் உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஆட்சியராக பணியாற்றினார். கடைசியாக, கருவூலம் மற்றும் கணக்கு துறையின் ஆணையராக இருந்தபோது விருப்ப ஓய்வு பெற்றார். இவரது விருப்ப ஓய்வு கோரிக்கை கடந்த ஆகஸ்ட் 17-ல் மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறையால் ஏற்கப்பட்டது.

கேஷ்கல் தொகுதியில் போட்டி: இந்நிலையில், நீல்கந்த் நேற்று முன்தினம் பாஜகவில் இணைந்தார். இவர் சத்தீஸ்கரில் சில மாதங்களில் வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில், கேஷ்கல் தொகுதியில் போட்டியிடுவார் எனத் தெரிகிறது. பஸ்தர் பகுதியில் அமைந்துள்ள கேஷ்கல்லில் இவர் போட்டியிடுவதால் பஸ்தரின் 12 தொகுதிகளிலும் பாஜகவுக்கு பலன் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதற்கு, அப்பகுதியின் பெரும்பாலான மாவட்டங்களில் பணியாற்றிய நீல்கந்த், சத்தீஸ்கரின் பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர் என்பது காரணமாகும்.

காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கரை வரும் தேர்தலில் பாஜக மீண்டும் தன்வசப்படுத்த முயற்சிக்கிறது. சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதியில் அதிகமாக வாழும் பல்வேறு பழங்குடி சமூகங்களின் அமைப்பாக, ‘சர்வ ஆதிவாசி சமாஜ்’ உள்ளது. இது இந்தமுறை சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடத் தயாராகி வருகிறது. இதை சமாளிக்க பாஜகவுக்கு நீல்கந்த் பெரும் உதவியாக இருப்பார் எனக் கருதப்படுகிறது.

சத்தீஸ்கரில் ஐஏஎஸ் அதிகாரி பாஜகவில் இணைவது இது முதன்முறையல்ல. இவருக்கு முன்பாக ஓ.பி.சவுத்ரி எனும் ஐஏஎஸ் அதிகாரி, 2018-ல் விருப்ப ஓய்வுபெற்று பாஜகவில் இணைந்தார். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் கர்சியா தொகுதியில் தோல்வி அடைந்த இவர், பாஜகவின் மாநிலப் பொதுச் செயலாளராக உள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE