இந்திய பொருளாதாரத்தின் மீது நம்பிக்கை அதிகரிக்கிறது: ஜி20 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

By செய்திப்பிரிவு

ஜெய்ப்பூர்: சர்வதேச அளவில் இந்திய பொருளாதாரம் மீதான நம்பிக்கை அதிகரித்து வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஜி-20 அமைப்பின் வர்த்தக, தொழில் துறை அமைச்சர்களின் மாநாடு ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பேசியதாவது:

கடந்த 2014-ம் ஆண்டில் சீர்திருத்தம், செயல்திறன், மாற்றம் ஆகிய லட்சியத்தின் அடிப்படையில் பயணத்தைத் தொடங்கினோம். அப்போது உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் இந்தியா 10-வது இடத்தில் இருந்தது. கடந்த 9 ஆண்டு கால முயற்சியின் பலனாக தற்போது 5-வது இடத்தை எட்டியுள்ளோம். அடுத்த சில ஆண்டுகளில் 3-வது இடத்தை எட்டிப் பிடிப்போம்.

இந்திய தொழில் துறையை பொறுத்தவரை சிவப்பு நாடாவில் இருந்து சிவப்பு கம்பளத்துக்கு மாறியுள்ளோம். இதன் காரணமாக அந்நிய முதலீடு அதிகரித்து வருகிறது. சுயசார்பு இந்தியா திட்டம், ஜிஎஸ்டி வரி நடைமுறை, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டு வருகின்றன.

கரோனா பெருந்தொற்று, உக்ரைன் போர் உள்ளிட்ட சவால்களால் உலக நாடுகளின் பொருளாதாரம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நேரத்தில் சர்வதேச வர்த்தகம், பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவது ஜி- 20 நாடுகளின் பொறுப்பாகும். எதிர்கால சவால்களை எதிர்கொள்ள அனைவரையும் உள்ளடக்கிய உலகளாவிய சங்கிலி தொடரை உருவாக்க வேண்டும். சர்வதேச சவால்களை எதிர்கொள்ள பொது கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பாக இந்தியாவின் சார்பில் ஏற்கெனவே பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் குறு, சிறு தொழில்களின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.இதன் காரணமாக வேலைவாய்ப்பு பெருகி வருகிறது. சர்வதேச அளவில் இந்தியப் பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கை அதிகரித்து வருகிறது.

இந்தியாவின் அனுபவங்களை ஜி-20 உறுப்பு நாடுகளுடன் பகிர்ந்துகொள்ள தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE