கோ
வா மாநில சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு நாளைய தினம் நடைபெறும் குஜராத் தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்துடன் விவிபாட் (Voter Verification Paper Audit Trail) இயந்திரமும் இணைக்கப்பட்டு வாக்குப் பதிவு நடக்க உள்ளது. இதன் மூலம் வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை கண்ணால் பார்த்து உணர்ந்து கொள்ள முடியும். ஆனால், “இதிலுமேகூட தவறுகள் செய்ய வாய்ப்பு இருக்கிறது. வாக்காளர்களின் நம்பிக்கையை அதிகரிக்க ஓட்டுக்கு ரசீது கொடுப்பது உட்பட மேலும் சில வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். இதன் மூலம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் பழக்கத்தை எதிர்காலத்தில் தடுக்க முடியும்” என்கிறார் மென்பொருள் நிபுணர் திருச்செல்வம்.
திருச்செல்வம் குறித்து சிறு அறிமுகம். ஆந்திர அரசுக்காக இவர் உருவாக்கிய மென்பொருள் தொழில்நுட்பம் மூலம் அங்கு விவசாயிகளின் விளை பொருட்களை லாபகரமாக சந்தைப்படுத்தும் திட்டம் பெரும் வெற்றியைப் பெற்றது. தற்போதும் விவசாய சந்தைப்படுத்தும் முறைகளில் மென்பொருள் தொழில்நுட்பத்தை புகுத்துவது குறித்து ஏராளமான ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறார். தேர்தல் விஷயத்துக்கு வருவோம்...
ஏற்கெனவே அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் ஓட்டுப் பதிவு இயந்திரத்தை ‘ஹேக்கிங்’ செய்வதெல்லாம் ஒரு விஷயமே இல்லை என்று தெரிவித்திருந்தார்கள். குஜராத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும், “பாஜக தனது இறுதி ஆயுதமாக ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய வாய்ப்புள்ளது” என்று குற்றம்சாட்டி வருகிறார்கள். இவை எல்லாவற்றையும்விட இன்றைக்கு பொதுவாகவே வாக்குப் பதிவு இயந்திரம் மூலம் முறைகேடு செய்ய முடியுமா, முடியாதா என்பது மக்களின் மிகப் பெரிய விவாதப் பொருளாகிவிட்டது. இன்னும் இதற்கான சந்தேகங்களை நிரந்தரமாகவும் அறிவியல்பூர்வமாகவும் போக்க முடியவில்லை. இந்த நிலையில்தான் இதற்கான தீர்வுகளை முன்வைக்கிறார் திருச்செல்வம்.
கண்ணால் பார்ப்பது பொய்யாகலாம்!
இதுகுறித்து ‘தி இந்து’-விடம் திருச்செல்வம் கூறுகையில், “130 கோடி மக்கள் தொகைக் கொண்ட நமது நாட்டில் வாக்களித்த வேட்பாளருக்குத்தான் நமது ஓட்டு போய் சேர்ந்ததா என்பதில் சந்தேகம் இருக்கக் கூடாது. தேர்தல் ஆணையமும் இதுதொடர்பான நம்பகத்தன்மையை ஏற்படுத்த பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அதில் முக்கியமானது விவிபாட் முறை. ஒரு வாக்காளர் தனது வாக்கைப் பதிவு செய்தவுடன் அவர் வாக்களித்த வேட்பாளரின் சின்னம், வாக்குப் பதிவு இயந்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ள விவிபாட் சாதனத்தின் துண்டுச் சீட்டில் அச்சிடப்பட்டு, கண்ணாடி இடைவெளி வழியே வாக்களித்தவர் பார்த்து உறுதி செய்து கொள்ளலாம். பின்பு அச்சான துண்டுச் சீட்டு துண்டிக்கப்பட்டு உள்ளேயிருக்கும் பெட்டியில் விழும். தேர்தல் அதிகாரி மட்டுமே இந்த பெட்டியைக் கையாள முடியும். இதன்படி ஓட்டு எண்ணிக்கையின்போது, இந்த பெட்டியில் உள்ள சீட்டுகளையும் பதிவான வாக்குகளையும் ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம் தவறு நடக்க வாய்ப்பில்லை என்கிற விளக்கத்தை தேர்தல் ஆணையம் அளிக்கிறது.
ஆனால் இதுவுமே முழுமையானத் தீர்வு அல்ல. இந்த மென்பொருளால், வாக்காளர் பதிவு செய்த சின்னத்தை துண்டு சீட்டில் அச்சிட்டுவிட்டு, வாக்குப்பதிவு இயந்திரத்தில் குறிப்பிட்ட வேட்பாளருக்கு பதியும்படி செய்ய முடியும் என்னும்போது அதே மென்பொருளால், ஓட்டு பதிவு முடிந்தவுடன், இன்னொருமுறை வேறு சின்னத்தை அச்சிட்டு பழைய சீட்டுகளை நீக்கிவிடவும் வாய்ப்பு உள்ளது. இதை சில நிமிடங்களிலேயே செய்து விட முடியும். மேலும், பல கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படுவதால், ஆரம்பக் கட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் சில நாட்களாவது இருப்பு வைக்கப்படும் நிலை உள்ளது. இந்த இடைவெளியில் ஆளும் அரசு நினைத்தால் எதையும் செய்யலாம் என்று மக்கள் சந்தேகம் கொள்வதும் இயல்பானதே.
கைக்கு வேண்டும் ரசீது!
வாக்காளர்களுக்கு அவர் அளித்த வாக்குக்கான ரசீது அளிக்கப்பட வேண்டும். அதில் அவர் வாக்களித்த சின்னம், பூத் எண், வாக்கு இயந்திரத்தின் எண், அவர் பதிவு செய்த வரிசை எண் ஆகியவை இருக்க வேண்டும். கட்சி சார்ந்த வாக்காளர்கள் மற்றும் தோல்வியடைந்த கட்சிக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கே சந்தேகம் அதிகம் இருக்கும். இதுபோன்ற சூழலில் அந்த வாக்காளர்களில் சிலருக்கு தங்களது வாக்கு ரசீதில் உள்ள வரிசை எண்ணையும், ஓட்டு இயந்திரம் பதிவு செய்து வைத்திருக்கும் வரிசை எண்ணையும் ஒப்பிட்டு சந்தேகங்களை தீர்க்க முடியும்.
உதாரணத்திற்கு ஒரு வாக்காளருக்கு வாக்கு இயந்திரம் வழங்கிய சீட்டில் வரிசை எண் 56 , சுத்தியல் சின்னம் என்று வைத்துக்கொள்வோம். ஓட்டு இயந்திரத்தில் பதிவுசெய்யப்பட்டிருக்கும் ஓட்டுக்களின் வரிசையில் 56 -ல் சுத்தியல் சின்னம் இருக்கவேண்டும். மாறி இருக்குமேயானால், தவறு நடந்திருக்கிறது என்பது நிரூபணமாகும். இவை தவிர, வேட்பாளர்களுக்கும் குறிப்பிட்ட சதவீதத்தின் அடிப்படையில் (உதாரணத்திற்கு மொத்த ஓட்டு எந்திரங்களின் எண்ணிக்கையில் ஐந்து சதவீதம் ) வாக்கு இயந்திரங்களை பரிசீலனைக்கு உட்படுத்தும் வாய்ப்பை வழங்கலாம்.
பணப்பட்டுவாடா தடுக்கலாம்!
வாக்காளர்களுக்கு ஓட்டுக்காக பணப்பட்டுவாடா செய்யப்படுவதையும் இதன் மூலம் தடுக்க முடியும். ஓட்டுக்கு ரசீது அளிக்கும் நிலை வந்தால், ஓட்டு போட்டுவிட்டு ரசீதைக் காட்டி பணம் பெற்றுக்கொள்ளுங்கள் என்று கட்சிகள் சொல்லும் நிலை ஏற்படலாம். பொதுவாக தேர்தல் முடிந்தபின் பணம் கொடுப்பதில் கட்சிகளுக்கும் ஆர்வம் இருக்காது. ஒரு வாக்காளருக்கும் தனது வாக்கு வெளியே தெரிந்தால் மற்ற வேட்பாளர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும் என்கிற அச்சம் ஏற்படும். இதனால், ஓட்டுக்கு பணம் கொடுப்பது படிப்படியாக குறையும். இதுபோன்ற நடவடிக்கைகளை எதிர்காலத்திலாவது இந்திய தேர்தல் ஆணையம் நடைமுறைப்படுத்த வேண்டும்...” என்கிறார்.
மேற்கண்ட முறையில் சில நிறைகுறைகள் இருக்கலாம். ஆனால், ஒரு வாக்காளருக்கு தனது வாக்கு, தான் விரும்பிய வேட்பாளருக்கே பதிவாகியிருக்கிறது என்பதற்கான ஆதாரத்தை அளிப்பது இந்திய தேர்தல் ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்தும் என்பதால் இதுபோன்ற பரிசோதனை முயற்சிகள் இனியேனும் தொடங்க வேண்டும். இதற்கான விவாதங்களும் பொதுவெளியில் வலுப்பெற வேண்டும்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago