“மகத்தான சாதனை” - சந்திரயான்-3 வெற்றியைப் பாராட்டி இஸ்ரோ தலைவருக்கு சோனியா காந்தி கடிதம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: சந்திரயான்-3 நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது குறித்து இஸ்ரோ தலைவருக்கு வாழ்த்து தெரிவித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். அதில், வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்நிகழ்வை "மகத்தான சாதனை" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து சோனியா காந்தி அனுப்பிய கடிதத்தில்,"நேற்று மாலையில் இஸ்ரோ நிகழ்த்திய மகத்தான சாதனையின்போது நான் எவ்வளவு பரவசத்துடன் இருந்தேன் என்பதை தெரிவிக்கவே இந்தக் கடிதம். இச் சாதனை அனைத்து இந்தியர்களுக்கும் குறிப்பாக இளைஞர்களுக்கு உற்சாகமும் பெருமையும் அளிக்கும் விஷயமாகும். பல ஆண்டுகளாக சிறப்பான திறன்களால் இஸ்ரோ கட்டமைக்கப்பட்டுள்ளது. அது குறிப்பிடத்தக்க தலைவர்களைக் கொண்டிருக்கிறது, கூட்டுமுயற்சியின் உந்துசக்தி அதனை இயக்குகிறது. அறுபதுகளின் முற்பகுதியில் இருந்து ஒன்றிணைக்கப்பட்ட தன்னம்பிக்கை அதன் பெரும் வெற்றிக்கு பங்களிப்பு செய்துள்ளது.

இந்த நேரத்தில் இஸ்ரோவில் உள்ள அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தச் சிறப்பான தருணத்துக்காக பங்களிப்பு செய்த ஒவ்வொருவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, புதன்கிழமை இந்திய நேரப்படி மாலை 6.04 மணிக்கு சந்திரயான்-3 விண்கலம் விக்ரம் லேண்டரை நிலவின் தென்பகுதியில் வெற்றிகரமாக தரையிறக்கி, நிலவின் தென்துருவத்தை அடைந்த முதல் நாடு என்ற வரலாற்றுச் சாதனையையும், நிலவில் லேண்டரை மென்மையாக தரையிறக்கிய நான்காவது நாடு என்ற பெருமையினையும் பதிவு இந்தியா செய்தது. அதற்கு முன்பு சோவியத் யூனியன், அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளே நிலவில் லேண்டரை மென்மையாக தரையிறக்கியுள்ளன.

தற்போது சூரிய சக்தியில் இயங்கும் பிரக்யான் ரோவர் நிலவில் உலா வரத் தொடங்கியுள்ளது. இது நிலவினை ஆய்வு செய்து ஒரு லூனார் நாளில் இந்தியாவுக்கு தகவல்களை அனுப்பும். ஒரு லூனார் நாள் என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமம்.

இதனிடையே, சந்திரயான்-3-ன் விக்ரம் லேண்டர் நிலவில் மென்மையாக தரையிறக்கப்பட்ட அந்தத் தருணத்தை அறிவித்த இஸ்ரோ தலைவர் சோம்நாத், "இந்தியா நிலவில் உள்ளது" என்று கூறினார். தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் இருந்து இந்தியாவின் வரலாற்று தருணத்தை காணொலி வழியாக நேரில் பார்த்த பிரதமர் மோடி, "இது இந்திய விண்வெளி பயணத்தின் வரலாற்று சிறப்பு மிக்க தருணம்" என்று தெரிவித்திருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

16 mins ago

இந்தியா

21 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்