சந்திரயான்-3 லேண்டரில் இருந்து ரோவர் பிரக்யான் நிலவில் தரையிறக்கும் பணி தொடக்கம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: சந்திரனின் தென் துருவத்திற்கு அருகே சந்திரயான்-3 லேண்டரில் இருந்து ரோவர் பிரக்யான் வெளியேறியது. ரோவர் தரையிறங்கும் பணி இரவு 10 மணியளவில் தொடங்கியது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சார்பில், நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான்-3 என்ற விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து கடந்த ஜூன் 14-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து பிரிந்து, விக்ரம் லேண்டர் மாலை 6:04 மணியளவில் நிலவில் தரை இறங்கியது. இச்சாதனை நிகழ்வை பல்வேறு தரப்பினரும் தொலைக்காட்சிகளிலும், செல்போன்களிலும் கண்டு மகிழ்ந்தனர்.

இதனிடையே நிலவில் தரையிறங்கிய லேண்டரில் இருந்து பிரக்யான் எனப் பெயரிடப்பட்ட ரோவர் தரையிறங்கும் பணி இரவு 10 மணியளவில் தொடங்கியது. பிரக்யான் ரோவர் நிலவில் தரையிறக்கும் நிகழ்வு முக்கியமானதாகும். நிலவில் தரையிறங்கும் ரோவர் 14 நாட்கள் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளும். ரோவர் நிலவில் இருந்து லேண்டருக்கு தரவுகளை அனுப்பும். பின்னர் லேண்டர் விண்வெளி நிறுவனமான இஸ்ரோவுக்கு அனுப்பும்.

ரோவர் தரையிறங்கும் பணி தொடங்க சிறிது நேரம் ஆனது. "ரோவர் சில மணிநேரங்களில் வெளிவரும். சில சமயங்களில் அதற்கு ஒரு நாள் கூட ஆகும்.. ரோவர் வெளியே வந்தவுடன், அது இரண்டு சோதனைகளைச் செய்யும்" என்று சோம்நாத் சந்திரயான்-3 லேண்டர் தரையிறங்கிய பிறகு செய்தியாளர்களிடம் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE