மிசோரம் ரயில்வே மேம்பால விபத்து | பலி எண்ணிகை 22 ஆக அதிகரிப்பு: உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவு

By செய்திப்பிரிவு

அய்ஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் கட்டப்பட்டு வந்த ரயில்வே மேம்பாலம் புதன் கிழமை இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து ரயில்வே மற்றும் காவல்துறையினர் கூறுகையில், "இடிபாடுகளில் இருந்து இதுவரை 22 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. எஃக்கு பாலத்தின் இடிபாடுகளில் சிக்கியுள்ள நான்கு பேரின் உடல்களை மீட்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன" என்று தெரிவித்துள்ளனர்.

மிசோரம் மாநில தலைநகர் அய்ஸ்வாலில் இருந்து 21 கி.மீ., தொலைவில் உள்ள சாய்ராங் என்னும் இடத்தில் கட்டப்பட்டுவரும் ரயில்வே மேம்பாலம், பணியின்போது புதன்கிழமை முற்பகல் 11 மணிக்கு இடிந்து விழுந்தது. வடகிழக்கு மாநிலங்களின் தலைநகரங்களை இணைக்கும் ரயில்வே திட்டத்தின் படி கட்டப்பட்டு வரும் 130 மேம்பாலங்களில் ஒன்றான பைரவி - சாய்ராங் இடையே கட்டப்பட்டுவரும் பாலம் இடிந்து விழுந்தது குறித்து விசாரணை நடத்த ரயில்வே நிர்வாகம் உயர்மட்டக்குழு அமைத்துள்ளது.

இந்த விபத்து குறித்து பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மிசோரம் பாலம் விபத்து மிகவும் கவலை அளிக்கிறது. விபத்தில் தங்களின் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனைகள். விபத்து பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும், காயமைடந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும்" என்று தெரிவித்துள்ளார். இதனிடையே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மிசோரம் மாநில ஆளுநர் ஹரி பாபு கம்பட்டி மற்றும் மாநில முதல்வருடன் தொலைபேசியில் பேசி, தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று உறுதியளித்தார்.

முன்னதாக விபத்து குறித்து வருத்தம் தெரிவித்திருந்த மாநில முதல்வர் சோரம்தங்கா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "அய்ஸ்வாலுக்கு அருகே உள்ள சாய்ராங் பகுதியில் கட்டப்பட்டு வந்த பாலம் இன்று இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சுமார் 15 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. இந்தத் துயரம் குறித்து அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். மீட்புப் பணிகளில் பெருமளவில் வந்து உதவிய மக்களுக்கு எனது அன்பினைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், வடகிழக்கு ரயில்வேயின் தலைமை செய்தித் தொடர்பாளர் சப்யசாச்சி தே, ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். வடக்கு மண்டலத்தின் மூத்த அதிகாரிகளும் சம்பவ இடத்தினை பார்வையிட செல்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த பாலம், பைராபி மற்றும் சாய்ராங் ரயில் நிலையங்களுக்கு இடையே குருங் ஆற்றின் மீது கட்டப்பட்டு வருகிறது. இந்த பாலத்தின் ஒரு தூணின் உயரம் மட்டும் 104 மீட்டர். மிசோரம் தலைநகர் அய்ஸ்வாலை அடையும் முன்பாக சாய்ராங் கடைசி நிலையமாக இருக்கும் வகையில் இந்த பாலம் கட்டப்பட்டு வந்தது. இந்தப் பாலத்தின் கட்டுமானப் பணிகள் முடிந்ததும் அய்ஸ்வால் தேசிய ரயில் பாதைகளுடன் இணைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE