“பாகிஸ்தான் மக்களை நாம் ஏன் குறிவைக்க வேண்டும்?” - மணிசங்கர் அய்யர் கேள்வி 

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பாகிஸ்தான் மக்கள் இந்தியாவை எதிரியாகவும் பார்க்கவில்லை. நண்பனாகவும் கருதவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மெமோய்ர்ஸ் ஆஃப் எ மேவெரிக் - தி ஃப்ர்ஸ்ட் ஃபிப்டி இயர்ஸ் (1941 - 1991) என்ற தனது புத்தக வெளியீட்டுக்கு முன்பாக அவர் செய்தி நிறுவனம் ஒன்றிடம் அவர் பேசினார். அப்போது அவர் கடந்த 1978 ஆம் ஆண்டு முதல் 1982 ஆம் ஆண்டு வரை கராச்சியில் இந்திய தூதரக ஜெனரலாக பணியாற்றியே போதான பழைய விஷயங்களை நினைவு கூர்ந்தார். அப்போது அவர் கூறியதாவது: பாகிஸ்தான் இந்தியாவை எதிரியாகவோ நண்பனாகவோ பார்க்கவில்லை. இந்தியாவை எதிரி நாடாக கருதாத பாகிஸ்தான் மக்களே அந்நாட்டில் உள்ள இந்தியாவின் மிகப்பெரிய சொத்து.

இது எதிரி நாடு சரிதானே?: தூதரகத்தில் பொறுப்பேற்ற இரண்டு மூன்று வாரங்களுக்கு பின்னர், ஒரு நாள் எங்கள் இரவு உணவுக்கு பிறகு என் மனைவி என்னிடம் "இது நமது எதிரி நாடு சரிதானே" என்று கேட்டார். நான் காரச்சியில் இருந்த வரை இந்தக் கேள்விகள் என்னுள் எதிரொலித்துக்கொண்டிருந்தது. அப்போது நான் ஒரு முடிவுக்கு வந்தேன், ராணுவத்தினரின் பார்வை, கொள்கை முடிவுகள் என்னவாக இருந்தாலும் பாகிஸ்தான் மக்கள் கவலைப்படுகிறார்கள், அவர்கள் எதிரிகள் இல்லை, அவர்கள் இந்தியாவை எதிரி நாடாக கருதவில்லை.

மோடிக்கு முன்பு வரை: ஒவ்வொரு முறையும் பாகிஸ்தான் அரசு மீது நமது எதிர்ப்பை காட்ட விரும்புகிறோம். விசாக்கள் நிறுத்தப்படுகின்றன. திரைப்படங்கள் தடைசெய்யப்படுகின்றன. தொலைக்காட்சி பரிமாற்றங்கள், புத்தகங்கள், பயணங்கள் அனைத்தும் நிறுத்தப்படுகின்றன. நமது ராஜதந்திர அணுகுமுறையில், பாகிஸ்தான் மக்களின் நல்லெண்ணத்தினைப் பெறுவது ஒருங்கிணைந்த பகுதியாக ஏன் இல்லை என்பது எனக்கு புரியவில்லை

நரேந்திர மோடி பிரதமராவதற்கு முன்பு வரை இருந்த அனைத்து இந்திய பிரதமர்களும் அவர்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் பாகிஸ்தானியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முயன்றிருக்கிறார்கள். ஆனால் இப்போது நாம் மவுனமாக இருக்கிறோம். இந்த மவுனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பாகிஸ்தானின் ராணுவத்தினர் இல்லை. அவர்கள் இப்போதும் சாட்டையைச் சுழற்றுகிறார்கள். மாறாக பாதிக்கப்பட்டது பாகிஸ்தான் மக்கள். அவர்களின் உறவினர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியாவில் வசிக்கிறார்கள். அவர்கள் உறவினர்களைப் பார்க்க நமது நாட்டுக்கு வர விரும்புகிறார்கள்.

நாம் ஏன் பாகிஸ்தானியர்களை குறிவைக்கிறோம்: நான் கராச்சியில் இருந்த போது மூன்று லட்சம் விசாக்களுக்கு அனுமதி வழங்கினேன். ஒன்று குறித்து கூட புகார்கள் வரவில்லை. ஆனாலும் நாம் பாகிஸ்தானியர்களை குறிவைக்கிறோம். விரும்பினால் பாகிஸ்தான் அரசைக் குறிவையுங்கள். அங்குள்ள மக்களை அல்ல. அவர்கள் நமக்கான மிகப்பெரிய சொத்து" இவ்வாறு மணிசங்கர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE