தினக்கூலியில் இருந்து மருத்துவக் கல்லூரி வரை - ஒடிசா பழங்குடியின இளைஞரின் அசாத்திய பயணம்

By செய்திப்பிரிவு

புவனேஸ்வர்: கிருஷ்ணசந்திர அடகா. வயது 33. தொழில்: விவசாயம். ஆனால், இன்னும் ஒரு வாரத்தில் மருத்துவக் கல்லூரியில் இணையவுள்ளார். 15 ஆண்டுகள் படிப்புக்கு பிரேக் கொடுத்த கிருஷ்ணசந்திர அடகா நடந்துமுடிந்த நீட் தேர்வில் வெற்றி பெற்று ஷாகித் ரெண்டோ மாஜி மருத்துவக் கல்லூரியில் இணைகிறார்.

அவருடைய வாழ்க்கைக் கதை இதோ: அடகா விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். அவருடைய தந்தைக்கு ஒரு ஏக்கர் மட்டுமே நிலம் இருந்தது. வீட்டில் இவருடன் சேர்த்து 5 பிள்ளைகள். வறுமைக்கு இடையே அடகா 10-ஆம் வகுப்பு வரை பயின்றார். கடந்த 2006 ஆம் ஆண்டு இவர் 58 சதவீத மதிப்பெண்களுடம் 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். அதன்பின்னர் உய ர்நிலைப் பள்ளிக்குச் செல்லவில்லை. பின்னர் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் அடகா 12-ஆம் வகுப்பு முடித்தார். ஆனால், பெற்றோரின் கடின காலம் வாட்ட கல்வி அதன்முன்னால் பெரிதாகத் தெரியவில்லை என்று அதை கைவிட்டதாக அடகா கூறுகிறார்.

“எனது மூன்று தம்பிகள் தச்சர்களாகிவிட்டனர். 4-வது சகோதரர் மோட்டார் மெக்கானிக் ஆகிவிட்டார். நான் அப்போது பிஎஸ்சி வேதியியல் பாடத்தில் சேர்ந்திருந்தேன். 2008-ல் அதை பாதியிலேயே விடுத்து கிராமத்துக்கு திரும்பிவிட்டேன். விவசாயம் பார்க்க ஆரம்பித்தேன். நான் நிலத்தில் கடுமையாக உழைத்தேன். ஆனால், அன்றாடம் ரூ.100-க்கு மேல் என்னால் சம்பாதிக்க இயலவில்லை. பின்னர் 2012-ஆம் ஆண்டு கேரளாவுக்குச் சென்றேன். அங்கே புலம்பெயர்ந்த தொழிலாளராகப் பணியாற்றினேன். பெரும்பாவூரில் செங்கல் சூளையில் வேலைக்குச் சேர்ந்தேன். ஆனால், அங்கும் சம்பாத்தியம் போதவில்லை. கோட்டயத்தில் தீப்பெட்டி தொழிற்சாலையில் சேர்ந்தேன். 2014-ல் துப்பாடிக்கு திரும்பி விவசாயப் பணியில் சேர்ந்தேன்.

2021-ல் ஒரு பயிற்சி மையத்தில் சேர்ந்தேன். என்சிஇஆர்டி பாடப் புத்தகங்களைப் படித்தேன். 2022-ல் நீட் தேர்வில் வெற்றி பெற்றேன். ஆனால், நிதிப் பற்றாக்குறை காரணமாக கவுன்சிலிங்குக் கூட செல்லவில்லை. 2023-ல் மீண்டும் நீட் எழுதி மாநிலத்தில் 3902-வது இடம் பெற்று வெற்றி பெற்றேன். இந்த முறை எனக்கு வாய்ப்பை நழுவவிட விருப்பமில்லை. ஆகையால் கடனாக ரூ.37,950 பெற்று கட்டணம் கட்டிவிட்டேன். அந்த நபர் கடனுக்கு வட்டி வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

என் கிராமத்தில் மருத்துவ வசதி இல்லாததால் உரிய நேரத்தில் உயிரைக் காக்க முடியாமல் போனதைக் கண்டு வருந்தியிருக்கிறேன். இப்போது எனது குடும்பத்தினர் நான் மருத்துவராக எல்லா உதவியும் செய்யத் தயாராக உள்ளனர்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE