சந்திரயான்-3 | விக்ரம் லேண்டரின் பயணம் சீராக உள்ளது: இஸ்ரோ அப்டேட்

By செய்திப்பிரிவு

ஸ்ரீஹரிகோட்டா: நிலவில் தரையிறங்க உள்ள விக்ரம் லேண்டரின் பயணம் சீராக உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்த அப்டேட்டை இஸ்ரோ அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

நாளை (புதன்கிழமை) மாலை 6.04 மணிக்கு சந்திரயான்-3 மிஷனின் இலக்காக நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்க உள்ளது. தொடர்ந்து அதிலிருந்து பிரக்யான் ரோவர் நிலவின் பரப்பில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் முக்கிய மைல்கல்லாக இது பார்க்கப்படுகிறது. இந்தமுறை லேண்டர் நிலவில் தரையிறங்குவதில் எந்த சிக்கலும் இருக்காது என இஸ்ரோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்வை நாளை மாலை 5.20 மணி முதல் நேரலையில் ஒளிபரப்புகிறது இஸ்ரோ. சமூக வலைதளம், இஸ்ரோ வலைதளம் மற்றும் தொலைக்காட்சியில் இது லைவ் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், லேண்டர் பொசிஷன் டிடெக்‌ஷன் கேமரா படம் பிடித்த நிலவின் படங்களை இஸ்ரோ தற்போது பகிர்ந்துள்ளது. நிலவுக்கு சுமார் 70 கி.மீ தொலைவில் கடந்த 19-ம் தேதி இந்தப் படம் எடுக்கப்பட்டது எனத் தெரிவித்துள்ளது. இந்த கேமரா, லேண்டர் மாடலின் பொசிஷனுக்கு உதவி வருவதாக தெரிவித்துள்ளது.

அதோடு விக்ரம் லேண்டரின் பயணம் திட்டமிட்டபடி சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமைப்புகளை ரெகுலராக செக் செய்து வருவதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE