உத்தராகண்ட் நிலச்சரிவில் சிக்கி கைக்குழந்தை உள்பட 4 பேர் பலி: இமாச்சலில் தொடரும் மீட்புப் பணிகள்

By செய்திப்பிரிவு

டேராடூன்: உத்தராகண்டில் நேற்று (திங்கள்கிழமை) ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 4 மாதக் குழந்தை, 2 பெண்கள் உள்பட 4 பேர் பலியாகினர். தெஹ்ரி மாவட்டம் சம்பாவில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவு பகுதியில் இரு டாக்ஸி நிலையம் இருந்தது. அது முழுவதும் புதைந்தது. எத்தனை வாகனங்கள் மண்ணில் புதைந்தன என்பது உறுதிபடத் தெரியவில்லை.

இதற்கிடையில், தெஹ்ரி - சம்பா இடையேயான சாலை நிலச்சரிவால் துண்டிக்கப்பட்டுள்ளது. மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவினர் எக்ஸ்கவேட்டர் போன்ற இயந்திரங்களைக் கொண்டு பாதையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுஒருபுறம் இருக்க உத்தராகண்டில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் உத்தராகண்டுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக டேராடூன், பாரீ, நைனிடால், சம்பாவத், பாகேஸ்வர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் இன்று மிககனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இமாச்சலில் தொடரும் மீட்புப் பணிகள்: இமாச்சல பிரதேச மாநில தலைநகர் சிம்லாவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிலச்சரிவு காரணமாக சம்மர்ஹில் பகுதியில் அமைந்திருந்த சிவன் கோயில் இடிந்து விழுந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் உடல் நசுங்கி இறந்தனர்.

இமாச்சல் நிலச்சரிவு மீட்புப் பணி: இதைத் தொடர்ந்து அப்பகுதியில் மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. இதுவரை அங்கிருந்து 17 பேரின் உடல்களை மீட்புப் படையினர் மீட்டுள்ளனர். இதுகுறித்து இமாச்சல பிரதேச மாநிலத் தலைமைச் செயலாளர் பிரபோகத் சக்சேனாநேற்று கூறும்போது, ‘‘இதுவரை 17 பேரின் உடல்களை மீட்டுள்ளோம். இன்னும் 2 பேரின் உடல்கள் உள்ளேயே சிக்கியுள்ளன. அதை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும் சிலரின் உடல்கள் உள்ளேயே சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். அடுத்த 2 அல்லது 3 நாட்களில் அந்த உடல்களையும் மீட்டுவிடுவோம்.

இப்பகுதியில் நிலச்சரிவால் ஏற்பட்ட சேதத்தை சீர் செய்து வருகிறோம். சாலைகள் செப்ப னிடப்பட்டு வருகின்றன’’ என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE