காவிரி நதிநீர் பங்கீடு வழக்கை விசாரிக்க புதிய‌ அமர்வு அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

By இரா.வினோத்


பெங்களூரு / புதுடெல்லி: காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கை விசாரிக்க புதிய அமர்வு அமைக்கப்படும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் உறுதி அளித்துள்ளார். காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இறுதி தீர்ப்பின்படி கர்நாடகா தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை வழங்கவில்லை.

இதுகுறித்து காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் அதனை கர்நாடகா செயல்படுத்தவில்லை. இதையடுத்து தமிழக அரசு கடந்த வாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில், ‘ஆகஸ்ட் மாதத்தில் வழங்க வேண்டிய 37.9 டிஎம்சி நீரை உடனடியாக திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு' வலியுறுத்தியது. இந்நிலையில் கர்நாடக அரசு சார்பில் நேற்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘நடப்பாண்டில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைவாகவே பொழிந்துள்ளது. இதனால் கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய பிரதான அணைகள் நிரம்பவில்லை. இருப்பினும் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்பட்டுள்ளது'' என தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழக அரசின் மனு நேற்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, கூடுதல் அட்வகேட் ஜெனரல் அமித் ஆனந்த் திவாரி ஆகியோர் ஆஜராயினர்.

அப்போது முகுல் ரோத்தகி, ‘‘காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி, ஆகஸ்ட் மாதத்தில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடகா வழங்கவில்லை. எனவே இந்த மனுவை மிகவும் அவசர வழக்காக கருதி உடனடியாக விசாரிக்க வேண்டும்.இந்த மனுவை விசாரிக்க புதிய அமர்வை இன்றே அமைக்க வேண்டும்'' என வலியுறுத்தினார்.

அதற்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ‘‘இவ்வழக்கை விசாரிக்க இன்றே 3 நீதிபதிகள் புதிய‌ அமர்வினை அமைக்கிறேன்’’ என்றார். இதையடுத்து தமிழக அரசின் வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் புதிய அமர்வு குறித்து நினைவூட்டினர். இதனிடையே, காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டுள்ளதற்கு அங்குள்ள பாஜக, மஜத ஆகிய எதிர்க்கட்சிகள் கர்நாடக அரசுக்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. முன்னாள் முதல்வர்கள் பசவராஜ் பொம்மை, குமாரசாமி ஆகியோர் கர்நாடக அரசை கடுமையாக விமர்சித்துள்ளனர். கர்நாடக விவசாய அமைப்பினர், பாஜகவினர் காவிரிநீர் திறக்கப்பட்டதை கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவிரி விவகாரம் குறித்து ஆலோசிக்க முதல்வர் சித்தராமையா தலைமையில் ஆக. 23-ல் (நாளை) பெங்களூருவில் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்பட்டுள்ளது என்று துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE