ஏழுமலையான் கோயிலில் 2 பிரம்மோற்சவ ஏற்பாடு தீவிரம்

By செய்திப்பிரிவு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்த ஆண்டு வருடாந்திர பிரம்மோற்சவம், நவராத்திரி பிரம்மோற்சம் என 2 பிரம்மோற்சவங்கள் நடைபெற உள்ளன. இந்த ஆண்டு அதிக அமாவாசை வந்ததால் இரட்டை பிரம்மோற்சவம் நடைபெறுகிறது.

வருடாந்திர பிரம்மோற்சவம் செப்டம்பர் 18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 26ம் தேதி வரை நடைபெற உள்ளது. அடுத்ததாக நவராத்திரி பிரம்மோற்வசம் அக்டோபர் 15 முதல் 23-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த பிரம்மோற்சவத்திற்கு கொடியேற்றம் கிடையாது.

வருடாந்திர பிரம்மோற்சவத்தில் முக்கிய நாட்களாக செப்டம்பர் 18-ம் தேதி கொடியேற்றம், 22-ம் தேதி கருட சேவை, 23-ம் தேதி தங்க ரத ஊர்வலம், 25-ம் தேடி தேர்த் திருவிழா 26-ம் தேதி சக்கர ஸ்நானம் என நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

நவராத்திரி பிரம்மோற்சவத்தில் கொடியேற்றம் இல்லை என்பதால், அக்டோபர் 19-ம் தேதி கருட சேவை, 22-ம் தேதி தங்க ரத ஊர்வலம், 23-ம் தேதி சக்கர ஸ்நானம் ஆகியவை முக்கிய நாட்களாக கருதப்படுகிறது.

இவ்விரு பிரம்மோற்சவ விழாக்களையொட்டி, திருமலையில் இப்போதே கோயில் பராமரிப்பு மற்றும் மாடவீதிகள் சீரமைப்பு பணிகள் தொடங்கி விட்டன. இதைத்தொடர்ந்து வாகனங்கள் பராமரிப்பு, மாட வீதிகளில் பக்தர்களுக்கான வசதிகள், மின் விளக்கு அலங்காரங்கள், மலர் அலங்காரங்கள் போன்ற பணிகள் நடைபெற உள்ளன.

பக்தர்கள் வேண்டுகோள்: இதனிடையே அலிபிரி, ஸ்ரீவாரி மெட்டு ஆகிய 2 மலைப் பாதைகளிலும் சிறுத்தை, கரடி போன்ற கொடிய விலங்குகள் நடமாட்டம் காணப்பட்டுள்ளதால் பிரம்மோற்சவங்கள் தொடங்கும் முன் அவற்றை கட்டுப்படுத்த தேவஸ்தானம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE