சந்திரயான்-3 நிலவில் தரையிறங்குவதில் எந்த சிக்கலும் இருக்காது: இஸ்ரோ

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: சந்திரயான்-3 நிலவில் தரையிறங்குவதில் எந்த சிக்கலும் இருக்காது என்று இஸ்ரோ தலைவரும், விண்வெளித் துறை செயலாளருமான எஸ்.சோம்நாத் தெரிவித்துள்ளார்.

இஸ்ரோ தலைவரும், விண்வெளித் துறை செயலாளருமான எஸ்.சோம்நாத், மத்திய விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை இன்று புதுடெல்லியில் சந்தித்து, நாளை மறுநாள் (புதன்கிழமை) மாலை, சந்திரயான்-3 நிலவில் தரையிறங்குவதற்கான தயார்நிலை குறித்து விளக்கினார். சந்திரயான்-3 விண்கலத்தின் வலுவான நிலை குறித்து விளக்கிய இஸ்ரோ தலைவர், அதன் அனைத்து கருவிகளும் சரியாக செயல்படுவதாகத் தெரிவித்தார். மேலும், புதன்கிழமை அன்று எந்தவொரு சிக்கலும் ஏற்படாது என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

அடுத்த இரண்டு நாட்களில், சந்திரயான்-3 விண்கலத்தின் செயல்பாட்டு நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படும் எனவும், நிலவில் தரையிறங்குவதற்கான இறுதி நிலை தொடர்பாக இரண்டு நாட்களுக்கு முன்பே பதிவேற்றங்கள் செய்யப்பட்டு சோதித்துப் பார்க்கப்படும் என்றும் எஸ்.சோம்நாத் தெரிவித்தார். சந்திரயான்-3 நிலவில் மென்மையான முறையில் தரையிறக்கம் செய்யப்படும் என்று தெரிவித்த இணையமைச்சர் ஜிதேந்திர சிங், பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ் விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு புதிய வரலாறு எழுதப்படும் என்று கூறினார்.

சந்திரயான்-3, 23.08.2023 அன்று இந்திய நேரப்படி மாலை 06:04 மணியளவில் நிலவில் தரையிறங்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஏற்கனவே சந்திரயான்-2 லேண்டர், தொடர்பை இழந்த நிலையில், பகுதி அளவு மட்டுமே வெற்றிகரமாக இருந்தது. இந்நிலையில் சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள லேண்டர் தொகுப்புக்கும் இன்னமும் சுற்றி வரும் சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டருக்கும் இடையே இருவழி தகவல் தொடர்பை இஸ்ரோ வெற்றிகரமாக நிறுவியுள்ளது. முன்னதாக, சந்திரயான் -3 எடுத்த நிலவின் தொலைதூரப் பகுதியின் புதிய படங்களை இஸ்ரோ இன்று பகிர்ந்தது.

சந்திராயன்-3 தனது நோக்கத்தை வெற்றிகரமாக நிறைவு செய்யும்பட்சத்தில், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவுக்குப் பிறகு, நிலவு தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு சாதனைகளைப் படைக்கும் உலகின் நான்காவது நாடாக இந்தியா திகழும். அத்துடன் நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை தரையிறக்கிய உலகின் ஒரே நாடாக இந்தியா திகழும். சந்திரயான்-3 திட்டம் மூன்று முக்கிய நோக்கங்களைக் கொண்டது, நிலவின் மேற்பரப்பில் பாதுகாப்பான மற்றும் மென்மையான தரையிறக்கத்தை மேற்கொள்ளுதல், நிலவில் ரோவர் சுற்றுவதை விளக்குவது மற்றும் அறிவியல் சோதனைகள் நடத்துவது ஆகியவை ஆகும்.

சந்திரயான் தொடரின் முதல் விண்கலமான சந்திரயான்-1, நிலவின் மேற்பரப்பில் நீர் இருப்பதைக் கண்டறிந்த பெருமைக்குரியது எனவும் இதை அமெரிக்காவின் நாசா உள்ளிட்ட உலகின் முன்னணி விண்வெளி நிறுவனங்கள் தங்களது சோதனைகளுக்கு இந்த தகவல்களைப் பயன்படுத்தியுள்ளதாகவும் ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி மார்க் 3 (எல்விஎம் 3) ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் கடந்த 14-ம் தேதி பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE