கர்நாடகாவில் தேசிய கல்விக் கொள்கை ரத்து - ஆலோசனைக் கூட்டத்தில் மாநில அரசு முடிவு

By செய்திப்பிரிவு

பெங்களூரு: கர்நாடகாவில் தேசிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளதாக அம்மாநில துணை முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கர்நாடகாவில் உள்ள பல்கலைக்கழக துணை வேந்தர்கள், கல்வியாளர்கள், அரசு உயர் அதிகாரிகள் ஆகியோருடன் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தேசியக் கொள்கை குறித்து விவாதிக்கப்பட்டது. கடந்த 2021-ம் ஆண்டு தேசியக் கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டது. எனினும், பாஜக ஆளும் பல மாநிலங்கள்கூட இதில் ஆர்வம் காட்டவில்லை; இந்த கல்விக் கொள்கையை ஏற்கவில்லை.

தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்கள் தேசியக் கல்விக் கொள்கையை ஏற்கெனவே நிராகரித்துவிட்டன. நாங்களும் அனைத்து அம்சங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டோம். ஏனெனில், கர்நாடகாவில் ஏராளமான உயர் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. கர்நாடகா அறிவு சார் மையமாக உள்ளது. நாங்கள் ஏற்கெனவே அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி கர்நாடக மாநில மாணவர்களின் நலன் கருதி தேசிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய அரசு முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் புதிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும். இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள இன்னும் ஒரு வாரத்தில் ஒரு குழு அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்தக் குழு முழுமையாக ஆய்வு செய்து கர்நாடகாவுக்கு ஏற்ப மாநில கல்விக் கொள்கையை வடிவமைக்கும்" என தெரிவித்தார்.

தேசிய கல்விக் கொள்கையை ரத்து செய்யும் கர்நாடக அரசின் முடிவுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா, "கர்நாடகாவின் வளர்ச்சியைத் தடுக்கும் நோக்கம்; மாணவர்களின் கல்வி மேம்பாட்டைத் தடுக்கும் நோக்கம்; கல்விக்கான புதுமையான அணுகுமுறைகளை தடுக்கும் நோக்கம் ஆகியவையே இதில் வெளிப்படுகிறது. இது அரசியல் உள்நோக்கம் கொண்ட முடிவு. இந்த முடிவை முதல்வர் சித்தராமையா மறுபரிசலனை செய்ய வேண்டும். மாணவர்களை வெற்று அரசியலில் இருந்து காப்பாற்ற வேண்டும். மாநில அரசுக்கு ஆலோசனை வழங்க பல ஆலோசகர்கள் இருந்தும் இதுபோன்ற ஒரு முடிவு எடுக்கப்பட்டிருப்பது துரதிருஷ்டவசமானது" என தெரிவித்துள்ளார்.

கர்நாடக அரசின் இந்த முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, "தேசிய கல்விக் கொள்கையை ரத்து செய்யும் முடிவு முட்டாள்தனமானது. தேசியக் கல்விக் கொள்கை பல ஆண்டுகளாக விவாதிக்கப்படுகிறது. சித்தராமையா தலைமையிலான முந்தைய அரசு, தேசிய கல்விக் கொள்கை வரைவுக்கு ஒப்புதல் அளித்தது" என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த 2021-ம் ஆண்டு பாஜக ஆட்சியின்போது, நாட்டிலேயே முதல் மாநிலமாக கர்நாடகாவில் தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தேசிய கல்விக் கொள்கை ரத்து செய்யப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, புதிதாக ஆட்சி பொறுப்பேற்ற முதல்வர் சித்தராமையா 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது, ‘கர்நாடக மாநிலத்தில் கடந்த 2021-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட‌ தேசிய கல்விக் கொள்கை ரத்து செய்யப்படும்’ என்று அறிவித்தார்.

“அதற்கு பதிலாக கர்நாடக மாநில கல்விக் கொள்கை கொண்டுவரப்படும். இந்த புதிய கல்விக் கொள்கை கர்நாடக மாநிலத்தின் வரலாறு, சமூக, பொருளாதார, கலாச்சார அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்கும். இதற்காக வல்லுநர் குழு உருவாக்கப்படும்” என்று அவர் அறிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்