Welcome, buddy... | சந்திரயான்-3 லேண்டரை வரவேற்ற சந்திரயான்-2 ஆர்பிட்டர்!

By செய்திப்பிரிவு

ஸ்ரீஹரிகோட்டா: நிலவின் சுற்று வட்டப்பாதையில் நிலவுக்கு மிக அருகில் பயணித்து வரும் சந்திரயான்-3-ன் லேண்டரை முறைப்படி வரவேற்றுள்ளது சந்திரயான்-2ன் ஆர்பிட்டர்.

நாளை மறுநாள் மாலை 6.04 மணிக்கு நிலவில் சந்திரயான்-3ன் விக்ரம் லேண்டர் தரையிறங்க உள்ளது. அன்றைய தினம் மாலை 5.20 மணி முதல் நேரலையில் ஃபேஸ்புக், யூடியூப், இஸ்ரோ இணையதளம் மற்றும் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் இந்த நிகழ்வு ஒளிபரப்பாகும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் முக்கிய மைல்கல்லாக இது பார்க்கப்படுகிறது. நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்குகிறது.

இந்நிலையில், கடந்த 2019-ல் நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டர் மற்றும் சந்திரயான்-3 லேண்டர் இடையே தகவல் தொடர்பு உருவாகியுள்ளது. இதை இஸ்ரோ உறுதி செய்துள்ளது. அந்த வகையில் ‘Welcome, buddy!’ என சந்திரயான்-3-ன் லேண்டருக்கு தகவல் அனுப்பி சந்திரயான்-2-ன் ஆர்பிட்டர் வரவேற்றுள்ளது. கடந்த 2019-ல் சந்திரயான்-2 லேண்டர் நிலவில் மோதிய காரணத்தால் அந்த முயற்சி தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பில், ‘லேண்டர் கலன் சீரான இயக்கத்தில் உள்ளது. தொடர்ந்து லேண்டர் தனது உட்புற சோதனைகளை செய்து கொண்டு, தரையிறங்க நிர்ணயிக்கப்பட்ட பகுதியில் சூரிய உதயத்துக்காக காத்திருக்கும். அனைத்து செயல்பாடுகளையும் முடித்து, நிலவின் தென்துருவத்தில் ஆக.23-ம் தேதி மாலை 6.04 மணிக்கு லேண்டர் தரையிறங்கும்’ என்று கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் எடுத்த நிலவின் புதிய புகைப்படங்கள் சிலவற்றை இஸ்ரோ தனது எக்ஸ் தளத்தில் இன்று வெளியிட்டுள்ளது. அதன் விவரம் > சந்திரயான்-3 விண்கலம் எடுத்த நிலவின் புதிய புகைப்படங்கள்: இஸ்ரோ வெளியீடு

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE