தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தல் - 115 வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்தார் முதல்வர் கேசிஆர்

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் பாரத் ராஷ்டிர கட்சி சார்பில் போட்டியிட உள்ள 115 வேட்பாளர்களின் பெயர்களை முதல்வர் கே.சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.

119 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்டுள்ள தெலங்கானா சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டின் இறுதிக்குள் தேர்தல் நடைபெற இருக்கிறது. இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளதால் அம்மாநிலத்தில் தேர்தல் பரபரப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. தெலங்கானா மாநிலம் உருவாகி இதுவரை 2 சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. இரண்டிலும் வெற்றி பெற்று முதல்வராக இருப்பவர் கே.சந்திரசேகர ராவ். கடந்த இரு சட்டமன்றத் தேர்தல்களின்போதும் கட்சியின் பெயர் தெலங்கானா ராஷ்டிர சமிதி என இருந்தது. அது தற்போது பாரத் ராஷ்டிர சமிதி என பெயர் மாற்றப்பட்டுள்ளது.

பாரத் ராஷ்டிர சமிதியின் தலைவரான கே.சந்திரசேகர ராவ், மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 115 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்று அறிவித்தார். நல்ல நேரம் பார்த்து இன்று பிற்பகல் வேட்பாளர் பட்டியலை அவர் வெளியிட்டார். இம்முறை, காஜ்வெல் மற்றும் கமாரெட்டி ஆகிய இரண்டு தொகுதிகளில் கே.சந்திரசேகர ராவ் போட்டியிடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேசிஆரின் மகனும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை அமைச்சரான கே.டி.ராமராவ், வழக்கம்போல் சிர்சில்லா தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நம்பள்ளி, நர்சாபூர், கோஷமகால், ஜங்கோன் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் மட்டும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இடதுசாரி கட்சிகளான சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகியவற்றுடன் கூட்டணி அமைக்கப்படும் என தகவல் வெளியான நிலையில், தனித்து போட்டியிடும் முடிவுவை கேசிஆர் அறிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE